நான் அரசியல்வாதியாக இருந்தால் அபராதம் விதிப்பேன்-நடிகை நமீதா

சென்னை வர்த்தக மையத்தில் இந்திய மலேசிய தமிழ் வர்த்தக சங்கம் மற்றும் பிங் ஆட்ஸ் இணைந்து ஜூன் 22, 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் மோட்டோ ஷோ 2012 என்கிற ஆட்டோபொபைல் கண்காட்சியை நடத்தவிருக்கிறது. பல்வேறு உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு நிறுவனங்களின் இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் கண்காட்சியில் இடம்பெற உள்ளன. இந்தக் கண்காட்சியில் வாகனங்களைப் பராமரிப்பதிலிருந்து அவற்றை முறையாக உபயோகப்படுத்து வரையிலான ஆலோசனைகளும் வழங்க உள்ளனர். வாகனங்களைச் சந்தைப்படுத்துவதை மட்டுமே நோக்கமாகக் கொள்ளாமல் போக்குவரத்து விதிகளை முழுமையாகக் கடைபிடித்து விபத்தில்லாமல் வாகனங்களை ஓட்டுவது சம்பந்தமான விழிப்புணர்வையும் ஏற்படுத்த உள்ளனர்.

அதற்காக மோட்டோ ஷோ 2012 நடைபெறும் முன்பு, ஜூன் 10 காலை சென்னை பெசன்ட் கடற்கரையில் ஆயிரக்கணக்கானோர் பங்குபெறும் விழ்ப்புணர்வு நடைப்பயணம் நடைபெற உள்ளது. நாங்கள் விதிகளை மதிக்கிறோம்… நீங்களும் ஏன் மதிக்கக் கூடாது..? என்கிற கேள்வியை எழுப்பி அனைவருக்கும் போக்குவரத்து விதிகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான் நிகழ்ச்சி அமைப்பாளர்களின் நோக்கம். அப்படி ஒரு கேள்வியை எழுப்ப வேண்டுமானால் அதற்கான முழுத்தகுதியும் போக்குவரத்து விதிகளை முழுமையாக மதிப்பவர்களால் தானே முடியும்?

நடிகர் பரத் மற்றும் நடிகை நமீதா அதற்கு மிகவும் பொருத்தமானவர்களாதலால் அவர்களை வைத்து இந்த நடைபயணத்துக்கான அறிமுகம் இன்று நடந்தது.
“நள்ளிரவு நேரம் என்றாலும் போக்குவரத்து விதிகளை மீறக்கூடாது என்று எனது டிரைவருக்கு உத்தரவு போட்டிருக்கிறேன்… நானும் அதனை முழுமையாகப் பின்பற்றுகிறேன்… போக்குவரத்து விதிகளை மீறி நம்மால் யாருக்கும் எந்த வித அசம்பாவிதங்களும் ஏற்பட்டு விடக்கூடாது… போக்குவரத்து விதிகளை ஒரு சிலர் மட்டும் பின்பற்றினால் போதாது… நாம் அனைவரும் பின்பற்ற வேண்டும்…

இந்த மாதிரி விழிப்புணர்வு சம்பந்தமான விழாக்களுக்குக் கூப்பிடும் போது உடனே ஒத்துக் கொள்கிறேன்… அவர்களை பலமுறை அழைக்க வைத்து அலைக்கழிப்பதில்லை… போக்குவரத்து விதிகளை மதித்து நடப்பது நமது கடமை…” என்று நடிகர் பரத் பேசினார். மேலும் பரத் இதுவரை பொது இடங்களில் ஒரு காகிதத்தைக் கூட வீசினதில்லை. சிறிய குப்பைகள் ஆனாலும் குப்பை சேகரிக்கும் இடங்களைத் தேடிச் சென்று கொட்டும் வழக்கமுடையவராயிருக்கிறார்.

கிட்டத்தட்ட 9 வருடங்களுக்கு முன்னால் ஆந்திராவில் ஒரு படப்பிடிப்பில் கலந்து கொண்டு திரும்பும் போது மிகப்பெரிய விபத்துக்குள்ளாகி உயிர்தப்பியதை நினைவு கூர்ந்த நமீதா அதற்குக் காரணம், “ நான் எப்பொழுதுமே காரில் பயணிக்கும் போது சீட் பெல்ட் அணிய மறந்ததில்லை என்பது தான்” என்கிறார். தொடர்ந்து பேசிய அவர், “ ஒரு சிலரது கவனக்குறைவு மற்றும் போக்குவரத்து விதிகள் மீறலால் பலரும் பாதிக்கப்படுகிறார்கள்… நண்பர்கள் ,குடும்பம் என்று பலரும் கஷ்டப்படுகிறார்கள்.. போக்குவரத்து விதிகள் உடைப்பதற்கே என்கிற மன நிலை நம் நாட்டில் இருக்கிறது.. அது மாறவேண்டும்… மிகவும் வெப்பமான சீதோஷ்ண நிலையில் ஹெல்மெட் போடுவது கஷ்டமாக இருக்கும் என்று நினைப்பவர்கள் தலைமுடியினை மிகவும் ஷாட்டாக வெட்டிக் கொள்ளலாமே!… “ என்று மிகவும் உரிமையுடன் ஆதங்கப்பட்ட நமீதா சுற்றுப்புறங்களை மாசுபடுத்துபவர்களையும் ஒரு பிடி பிடித்தார். பொது இடங்களில் இயற்கை உபாதைகளை தீர்த்துக் கொள்ளக்கூடாது… எச்சில் துப்புதல் மற்றும் குப்பைகளைப் போடுதல் கூடாது என்று வலியுறுத்திய நமீதா, “ நான் அரசியல் வாதியாக இருந்தால் அப்படிச் செய்பவர்களுக்கு 5000 ,10000 என்று மிகக்கடினமான அபராதம் விதிப்பேன்..” என்றார்.
விரைவில் அதி விரைவு பைக்கான ஹார்லே டேவிட்சன் வாங்க உள்ளார் நமீதா என்பது கூடுதல் தகவல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *