புதுமுக நடிகர் சத்யாவுக்கு நல்லிரவில் அதிர்ச்சியளித்த சிம்பு!

 
‘கனா’ படத்தில் நடிக்கக் கூடிய வாய்ப்பு எனக்கு அருண்ராஜ் மூலம் தான் கிடைத்தது.
 
நானும் அவரும் கிரிக்கெட் விளையாடும்போதே நல்ல நண்பர்கள். அவர் வேகப் பந்து வீச்சாளர். நான் விக்கெட் கீப்பர். அப்போதிருந்தே எங்களுக்குள் நல்ல புரிதல் இருந்தது.
 
நான் சினிமாவிற்கு வந்ததின் லட்சியம் விஜய்க்கு காஸ்ட்யூம் டிசைன் பண்ண வேண்டும் என்று தான். அது நிறைவேறிவிட்டது.
 
இதுவரை 35 படங்களில் பணியாற்றிவிட்டேன்.
 
ஆனால் சம்பாதிக்கவில்லை. சினிமாவில் நிறைய படத்தில் நடிக்கணும், நிறைய சம்பாதிக்கணும், நிறைய சாதிக்கணும்.
 
அதுமட்டுமல்லாமல், எனக்கு CCL-ல் விளையாட வேண்டும். அதில் விளையாட வேண்டுமானால் குறைந்தது 7 படங்களிலாவது நடித்திருக்க வேண்டும்.
 
இப்போது அதற்கான அனுமதியை வாங்கிவிட்டேன். அதற்காக தான் நான் சினிமாவில் நடிக்க வந்ததே.
 
அந்த ஆசையை அருண்ராஜிடம் கூறியபோது, என்னை ஒத்திகைக்கு வர சொன்னார். பிறகு, ‘கனா’ வில் நடிக்க தேர்வு செய்தார்.
 
ஆனால், நிஜத்தில் கிரிக்கெட் விளையாடுவதற்கும், படத்தில் நடிப்பதற்கும் நிறைய வித்தியாசம் மற்றும் பெரும் சவாலாக இருந்தது.
 
நான் ‘டிராவிட்’ மாதிரி தான் ஒவ்வொரு ‘ரன்’னாகத்தான் எடுப்பேன். திடீர்னு சிக்ஸர் அடிக்க சொல்வார்கள். அந்த காட்சிகளில் மிகவும் சிரமப்பட்டு தான் நடித்தேன்.
 
அதேபோல, சத்யராஜுடன் பல காட்சிகளில் நடித்திருப்பேன். அவருடன் நடிப்பதற்கு பயமாக இருந்தது. அவர் ஒற்றை வாய்ப்பில் நடிக்கக் கூடிய திறமை வாய்ந்தவர்.
 
ஆகையால், நேரம் கடத்தாமல், முடிந்த அளவுக்கு இரண்டாவது வாய்ப்பு வராமல் நடித்தேன். ஏற்கனவே, எனக்கு சில படங்கள் நடித்த அனுபவம் இருந்ததால் இப்படத்தில் அது உதவியாக இருந்தது.
 
அப்படத்தில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால், ஒரு காட்சியில் நான் சில செய்கைகளை செய்து வசனம் பேச வேண்டும்.
 
அதன்பிறகு, அவர் பேச வேண்டும் என்பது போல அந்த காட்சி இருக்கும். அதற்கு அவர் நீங்கள் இரண்டு செய்கைகளை மட்டுமே செய்துவிட்டு வசனம் பேசுங்கள்.
 
அப்போது நான் பேசுவதற்கு நேரம் சரியாக இருக்கும் என்று யோசனை கூறினார். ஆகையால், காலதாமதமாகாமல் விரைவாக காட்சிகளை படமாக்க முடிந்தது. பெரிய நடிகர் என்ற பந்தா இல்லாமல் என்னிடம் அவர் பழகியது எனக்கு பெருமையாக இருந்தது.
 
படம் பார்த்ததும், சசிகுமார், சமுத்திரகனி, விக்னேஷ் சிவன், DD, தம்பி ராமையா ஆகியோர் என்னைப் பாராட்டினார். சிம்பு என்னிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டு, ‘டேய் சூப்பரா பண்ணியிருக்கடா’ என்று பாராட்டினார்.
 
அவர் எவ்வளவு பெரிய ஆள். எங்காவது விழாவில் பார்த்து ‘கனா’வில் உனது நடிப்பு நன்றாக இருந்தது என்று கூறியிருக்கலாம். அலைபேசியில் அழைத்து பேச வேண்டிய அவசியம் அவருக்கில்லை. அவரின் பாராட்டு அளவில்லாத மகிழ்ச்சியளித்தது.
 
இன்னும் நன்றாக நடிக்க வேண்டும் என்ற பொறுப்பு கூடியிருக்கிறது. இன்னும் 3 படங்களில் ஒப்பந்தம் ஆகியிருக்கிறேன். விரைவில் அதற்கான படப்பிடிப்பு நடக்கும்.
 
நடிப்பு என்பது எப்போதும் நிரந்தரம் கிடையாது. எப்போது மேலே வருவோம், எப்போது கீழே செல்வோம் என்பது தெரியாது. ஆகையால், என்னுடைய தொழிலையும், நடிப்பையும் இணைந்தே பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.
 
சினிமாவில் இப்போதுதான் நான் பிறந்திருக்கிறேன். இன்னும் நிறைய தூரம் செல்ல வேண்டும். எல்லோரும் முதல் ஐந்து படங்களுக்கு ஒரே கதாபாத்திரம் கொடுத்துவிட்டு தான் தோற்றத்தை மாற்றுவார்கள்.
 
ஆனால், எனக்கு நான் நடித்த அனைத்து படங்களிலும் வெவ்வேறான கதாபாத்திரம் தான். இப்படம் முழுக்க முழுக்க கிராமத்து கதாபாத்திரம்.
 
இதற்குப் பிறகு வரக்கூடிய படங்கள் நகரத்தில் வசிக்கக்கூடிய கதாபாத்திரமாக இருக்கும். இதுபோல, சவாலான கதாபாத்திரங்களில் நடிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும்.
 
சிவகார்த்திகேயன் எனக்கு நல்ல நண்பர். தேவி திரையரங்கத்தில் அனைவரும் சேர்ந்து படம் பார்த்தோம். அவருடன் இருக்கும் நேரம் ஒவ்வொருவரும் மாறி மாறி வசனங்கள் பேசி கிண்டல் அடித்து சிரித்துக் கொண்டே இருப்போம்.
 
இந்த கதாபாத்திரம் பேசக்கூடிய அளவு இருப்பதற்கு அவரும் ஒரு காரணம். அவருக்கும் எனது நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *