விஜய்- அஜித் உஷாராக வேண்டிய நேரமிது..

முன்பு ஒரு ஸ்டாரை சந்திக்க விரும்பும் ரசிகன் கடக்க வேண்டிய தூரம் அதிகம். வெறித்தனமான ரசிகர்கள் கூட இறுதிவரை தங்கள் அபிமான நட்சத்திரத்தைக் காணாமலேயே கடந்து போயிருக்கிறார்கள்.

தற்போது அப்படியல்ல.. கடைதிறப்பு விழா, இசை வெளியீட்டு விழா, உதவி வழங்கும் விழா என  தங்கள் அபிமான நட்சத்திரங்களை ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் ரசிகர்கள் சந்தித்துவிடுவதுண்டு.

ரசிகனுக்கும் ஸ்டாருக்குமான இடைவெளி இப்போது வெகுவாகக் குறைந்துவிட்டது. எப்படியாவது பார்த்துவிடமாட்டோமா என்ற ஏக்கம் குறைந்து அவனை நான் பார்த்துட்டேன்கிற ஒருமை லெவலில் இப்போதைய ரசிகர்கள்! அப்படி பேசும் தளத்திற்கு நம் எட்டாக்கனிகள் கிட்டக் கிடைக்கின்றன.

இதில் தவறு இருக்கிறதா இல்லையா என்பதைப் பேச வரவில்லை. அதேசமயம், சமூக வலைத்தளங்களில் எனக்கு அவ்வளவு ஃபாலோயர்ஸ் என்று சொல்லக் கூடிய பெருமைக்கு ஸ்டார்ஸ் தள்ளப்பட்டிருக்கின்றனர் என்பதும் கவனிக்கக் கூடியதே.

மில்லியன் எனக் கொண்டாடும், இந்த ஃபாலோயர்ஸ் லிஸ்ட் ஒரு குறிப்பிட்ட நடிகரை மட்டுமே ஃபாலோ பண்ணுபவர்களா? என்றால் .. இல்லை..

உதாரணத்திற்கு, ஜெயம் ரவியைத் தொடர்பவர் விஜய் சேதுபதியையும் தொடரக்கூடும். ஸோ, அது  ஒரே ஒருத்தருக்கான ஒரிஜினல் தொடராளிகள் இல்லை. அல்லது உண்மையான ரசிகர்கள் கூட்டம் அல்லது குழுமம் இல்லை.

ஆனால் உண்மையான குறிப்பிட்ட இலக்க ரசிகர்கள் இருக்கக் கூடும். அவர்கள்தான் இங்கு பிரச்சனையே..

ஒரு குறிப்பிட்ட காலம் வரை அஜித் பற்றி பெருமையாகவும், விஜய் பற்றி மகா மட்டமான கருத்துக்களும் ட்வீட்டர் தளத்தில் பரப்பி வரப்பட்டது. இது விஜய்யின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட, விஜய் தரப்பிலிருந்தும் ரசிகர் பட்டாளங்கள் களமிறக்கப்பட்டனர்.

அதுவரை இருந்த ஒரு பக்க விமர்சனங்கள் அப்போதிருந்து, இரு பக்க சண்டையாக்கப்பட்டன.

ரஜினி கமலுக்காக சுவர் விளம்பரம், போஸ்டர் ஒட்டும் சண்டை நடந்ததுபோல் இங்கு அவர் வசூலில் பெரியவரா? இவர் பெரியவரா? எனக் குடுமிப் பிடி சண்டை நடக்கத் தொடங்கியது.

எங்கும் ஆரோக்கியமான விவாதம் இருந்ததாகவே தெரியவில்லை. ஒரு படம் மொக்கையாக தனது ஸ்டார் கொடுத்துவிட்டால் அதுபற்றிய ஆரோக்கியமான விவாதம் நடந்து இதுவரை  பார்க்க முடிந்ததில்லை.

 ஒரு சினிமா யார் நடித்து தோல்வியடைந்தாலும் அது ஒரு தயாரிப்பாளருக்கு அல்லது அந்த படம் சார்ந்த குழுவுக்கு எவ்வளவு இழப்பு என்பதை இந்த எதிர்ரெதிர் ரசிகப்பட்டாளங்கள் உணர்வதே இல்லை.

அஜித் விஜய் படங்கள் ஓரளவு சுமாராக இருந்தாலே நல்ல கலெக்சன் பார்த்துவிடும். ஆனால் இந்த ட்வீட்டர் சண்டைகள் வந்த பிறகு இருவரின் சுமார் படங்களின் வசூல் வெகுவாகக் குறைந்துவிட்டது.

அஜித் ரசிகருக்கு எப்படியாவது விஜய் படம் தோற்றுவிட வேண்டும்.  விஜய் ரசிகருக்கு அஜித் படம் வெற்றிபெற்றுவிடக்கூடாது. இதுதான் இவர்களின் மனநிலை.  தவிர, இந்த இரு மாஸ் ஹீரோக்களின் ரசிகப் பெருமக்களுக்கு நல்ல சினிமா, அல்லது சினிமா நல்ல வாழ வேண்டும் என்ற எண்ணமே இல்லை என்பதையே பார்க்க முடிகிறது.

யாராவது ஒரு விமர்சகர் படத்தைப் பற்றி விமர்சனம் செய்திருந்தால் அவ்வளவுதான்.. அவரின் ஏழு தலைமுறையும் கெட்ட வார்த்தைகளால் கிழித்துத் தொங்கவிடப்படும்.

சினிமாவில் வேறு பிரபலங்களும் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க முடியவில்லை. அப்படி தெரிவித்துவிட்டால், அவ்வளவுதான்.. டிக்சனரியில் காணக் கிடைக்காத மிகக் கேவலமான வார்த்தைகள் பயன்படுத்தப்படும்.. 

இது எல்லாமே தன் தலைவனை ஏத்திவிடுவதாக, சமூக வலைதளங்கள் மூலம் தன் ஆதர்ச நடிகரை கிட்ட நெருங்கிவிட்டதாக நினைத்துக்கொள்ளும் ரசிகப்பெருமக்கள் அவருக்கு செய்யும் நல்லதாக எண்ணிக்கொள்கிறார்கள்.

அதுதான் தவறு. ஒருவரைப் புகழ்ந்தும் இன்னொருவரை இகழ்ந்தும் இவர்கள் செய்யும் தவறுகளால் இன்னொரு நடு நிலையான தரப்பு படம் பார்க்க இருப்பதைத் தடுத்துவிடுகின்றனர். நண்டு கதையாக ஒருவர் காலை இன்னொருவர்   வாரிக்கொண்டே இருக்கிறார்கள்.

விஜய் பட தோல்வியா? அஜித் ரசிகர்கள் பார்த்துக்கொள்வார்கள். அஜித் பட தோல்வியா? விஜய் ரசிகர்கள் பார்த்துக்கொள்வார்கள் என்று போகிறது அந்த ரசிகர்களின் போக்கு.

அதுமட்டுமல்ல.. கேவலமான வார்த்தைகள்.. காதில் கேட்க முடியாத அளவு கெட்ட வார்த்தைகள்.. இதில் அசிங்கம் என்னவென்றால் அஜித் , விஜய்யின் தாய் தந்தை பற்றி கூட கேவலமான வார்த்தைகளில் விமர்சிப்பதுதான்.

ஏன் விஜய் ரசிகன் அஜித் அப்பாவையோ அம்மாவையோ கேவலமாகப் பேசினால் அது அஜித்தைப் பாதிக்காதா?.. அதேபோல் அஜித் ரசிகன் பேசும்போது அது விஜய்யை பாதிக்காதா… எப்படியோ ஒருவிதத்தில் உன் மானசீக ஸ்டாரும், அவரின் குடும்பமும் பொதுவெளியில் அசிங்கப்படுகிறதே..

யோசிக்கமாட்டீர்களா நண்பர்களே..??

உங்கள் ஸ்டார் பெயர் வாரம் ஒருமுறை வரும் பத்திரிகை செய்திகளில் அதிசயமாக இடம் பெறும்போது பிரமிக்க வைத்தது. சிலிர்க்க வைத்தது.

ஒரு பத்திரிகையாளன் உங்கள் ஸ்டார் பற்றி எதிர் செய்தி எழுதும்போதுகூட எவ்வளவு கவனமாக வார்த்தைகளைக் கையாள்வான் தெரியுமா?

ஆனால் இப்போது அந்த வாரம் வரை காத்திராமல் இன்ஸ்டெண்டாக அவர்களே மிக நெருக்கமாக உங்கள் உள்ளங்கைகளில் கிடைத்து விட்டதால் அவர்களின் மதிப்பு உங்களுக்கு தெரியாமல் போய்விட்டது..

அசிங்கம் நீ பண்ணினால் என்ன? அவன் பண்ணினால் என்ன? எப்படியும் ஏதோவொரு விதத்தில் அசிங்கப்படுவது உன் தலைவன் தானே?

குறிப்பாக அஜித், விஜய், சூர்யா போன்றோர் இதைக் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். கல்வியை டார்கெட்டாக வைத்து செயல்படும் சூர்யாவின் ரசிகர்களும் இந்த கெட்ட வார்த்தை விசயத்தில் சளைத்தவர்களல்ல.. 

தயவுசெய்து, நல்லவிதத்தில் எதையும் விவாதிக்க அணுக உங்கள் ரசிகர்களுக்குக் கற்றுத் தாருங்கள். ஆரோக்கியமான விவாதங்களை முன் வைக்க அவர்களை அறிவுறுத்துங்கள். தங்கள் ரசிகர்கள் இணையத்தில் கெட்ட வார்த்தைகளில் பேசுவதை எந்தவிதத்திலும் அணுமதிக்கக்கூடாது.

இவர்களின் தன் தலைவன் தான் முக்கியம் என்ற அதீத பாசம் உங்களுக்கு கேவலத்தைத் தான் கொண்டுசேர்க்கிறது என்பதை   உட்ச நட்சத்திரங்களாகிய நீங்கள் உணருங்கள்.

ஒருசில ரசிகர்கள் இரத்ததானம் செய்தல், ஏழைக்குழந்தைகளுக்கு புத்தகங்கள் வழங்குதல், தண்ணீர் பந்தல் ஏற்படுத்துதல், உணவளித்தல் போன்ற சமூக சேவை செய்வதைக் கேள்விப்படும்போது எவ்வளவு ஆறுதலாக இருக்கிறது தெரியுமா? அதை செய்யச் சொல்லுங்கள்.

இந்த ஃபேக் ஐ டிக்கள் ஸ்டார்களான உங்களுக்குத் தான் அவமானம் என்பதை உணர்ந்து ஒரு அறிக்கையாவது விடுங்கள்.

நீங்கள், உங்கள் பெற்றோர் பொதுவெளியில் கேவலமாக அழைக்கப்படுவது என் போன்றோருக்கு கவலையளிக்கிறது. நாளை ஏதேனும் அரசியல் நோக்கங்கள் இருந்தால் அதை இவர்கள் இன்றே சிதைத்துவிடுவார்கள் போல..   

அன்பு ஸ்டார்களே.. உங்கள் ரசிகர்களை அறிவாளிகளாக்கப் பழக்குங்கள்.. இல்லையேல் இவர்களே உங்களுக்கு தவறான இமேஜை உருவாக்கிவிடுவார்கள். இதுதான் உஷாராக சரியான நேரம்.

ஓதுவதை ஓதிவிட்டோம்.. இனி உங்கள் பாடு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *