அன்பானவன் அடங்காதவன் அசராதவன் – விமர்சனம்


த்ரிஷா இல்லனா நயன்தாரா என்ற துடிப்பான கதையை (இளைஞர்களுக்கு மட்டும்) கொடுத்த ஆதிக் ரவிச்சந்திரன் சிம்புவோடு இணைந்து அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தினை இயக்கியுள்ளார். இது சிம்புவிற்கான களமாக இருந்ததா என்பதை விமர்சனம் மூலம் காணலாம்.

1980களில் மதுரையை தன் கண்ட்ரோலில் வைத்திருக்கும் மைக்கேல் (சிம்பு), பல கொலைகளை செய்து ரவுடியாக எண்ட்ரீ ஆகிறார். ஸ்ரேயாவை காதலிக்கும் சிம்பு, ஸ்ரேயாவிற்காக தனது ரவுடிதனத்தை விட்டுவிட்டு வாழலாம் என நினைக்கும் போது போலீஸ் அவரை கைது செய்து சிறையில் அடைத்து விடுகிறது. சிறையில் இருந்து தப்பித்து வரும் சிம்பு, ஸ்ரேயாவிற்கு வேறொருவருடன் திருமணம் ஆக போகிறது என தெரிந்ததும் துபாய் சென்று விடுகிறார் சிம்பு.

மதுரை மைக்கேலாக இருந்த சிம்பு துபாய் சென்று மிகப்பெரிய டான்’ஆக வளர்கிறார். துபாய் போலீஸ் அவரை வலைவீசி தேட, சிம்புவோ சென்னையில் அஸ்வின் தாத்தா என்ற பெயரில் 55 வயதில் 26 வயது தமன்னாவை காதலித்து வருகிறார். அவரது காதல் கைகூடியதா என்பதே படத்தின் மீதிக் கதை.

படத்தினை தனி ஒருவனாக தூக்கி பிடித்து செல்கிறார் சிம்பு. தனக்கே உரித்தான ஸ்டைலில் கலக்கி எடுத்திருக்கிறார். அதிலும் மதுரை மைக்கேலாக வரும் சிம்பு மதுரை பேச்சு, உடல்வாகு என அனைத்திலும் ”சிறப்ப்ப்ப்பு” தான். அதிலும், யுவனின் பின்னனி இசையில் அவர் நடந்து வருவது ரசிகர்களுக்கான கொண்டாடும் இடம்.

இது மட்டுமே படத்தின் ப்ளஸ்… வேறு எதையும் பெரிதாக கூறும்படி இல்லை.

கதையில் ஆரம்பித்து திரைக்கதை, படத்தொகுப்பு, வசனம் என அனைத்திலும் மிக மோசமான சொதப்பல் தான். பல இடங்களில் லாஜிக் ஓட்டைகள் எல்லாம் எட்டி பார்க்கின்றன. படத்தின் முதல் பாதியில் பெரிதான அழுத்தம் இல்லையே என பார்த்தால் இரண்டாம் பாதியில் அதை விட அழுத்தம் குறைவாக இருக்கிறது. தமன்னாவுடனான அஸ்வின் தாத்தா காதல் முயற்சி சுத்தமாக எடுபடவில்லை.

பல இடங்களில் காமெடி காட்சி என்ற பெயரில் வரும் சீன்கள் வெறுப்படைய வைக்கின்றன. படம் முழுவதும் பெண்களை குறிவைத்து தாக்கி பேசும் வசனங்களும் டபுள் மீனிங் வசனங்களும் பல வருகின்றன.

முதல் பாகமே போதும் போதும் என்ற நிலைக்கு வரும் போது இரண்டாம் பாகமா என ரசிகர்களை ஓட வைத்து விடுகிறார்கள். யுவனின் இசையில் பாடல்கள் எதுவும் எடுபடவில்லை என்றாலும் பின்னனி இசை மிரட்டியெடுத்திருக்கிறார். கிருஷ்ணனின் ஒளிப்பதிவு கலர்புல்லாக இருக்கிறது.

அன்பானவன் அசராதவன் அடங்காதவன்:

எதற்கும் அசராதவர் நீங்கள் என்றால் போய் பார்த்து விட்டு வாங்க…. நாங்க கேரண்டி இல்லீங்க

-2.2/5

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *