அச்சமின்றி – திரைவிமர்சனம்

Rating 3.2/5

கல்வித் துறையில் இன்றைக்கும் தொடர்ந்து நடைபெற்று வரும் ஒரு ஊழலை வெளிச்சம் போட்டுக் காட்டும் கதைதான் இந்த ‘அச்சமின்றி’ திரைப்படம்.

பிக்பாக்கெட்டாக வருகிறார் விஜய் வசந்த். கருணாஸ், தேவதர்ஷிணி ஆகியோரும் விஜய் வசந்துடன் கூட்டணி வைத்து திருட்டு வேலைகளை செய்து வருகின்றனர். நாயகி சிருஷ்டி டாங்கேயை பார்த்த தருணம் காதல் வந்து விடுகிறது நாயகனுக்கு.

விஜய் வசந்தை போலீஸாக நினைத்து அவருடன் பழகி வருகிறார் சிருஷ்டி. இந்நிலையில் அந்த ஏரியா புதிய போலீஸ் அதிகாரியாக பதவியேற்கிறார் சமுத்திரகனி. கறை படாத அதிகாரியாகவும், என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாகவும் இருக்கிறார் சமுத்திரகனி.

சமுத்திரகனி, தான் காதலித்த வித்யாவை சில வருடங்களுக்குப் பின் அந்த ஏரியாவில் காண்கிறார். வித்யா தன் வாழ்க்கையில் நடந்த சில சோதனைகளை கூறி சமுத்திரகனியின் ஆறுதலை பெறுகிறார்.

வித்யாவின் சகோதரன் பத்தாம் வகுப்பு தேர்வில் மாநிலத்தில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவன். ஒரு தனியார் பள்ளி நிறுவனம் இலவச படிப்பு தருவதாக கூறி அவனை அழைத்து செல்கின்றனர். சில நாட்களில் அந்த மாணவனை பிணமாக அனுப்பி வைத்து விடுகின்றனர் அந்த பள்ளி நிறுவனம். மகன் இறந்த சோகத்தில் தந்தையும் தாயும் இறந்து விடுகின்றனர். தனிமரமாக நிற்கிறார் வித்யா. இதனால் சமுத்திரகனியின் ஆறுதலை பெறுகிறார்.

சமுத்திரகனி வித்யாவை திருமணம் செய்து கொள்ள நினைக்க, வித்யாவும் ஓகே என கூறிவிடுகிறார். இந்நிலையில் ஒரு விபத்தில் வித்யா இறந்து விட, உடைந்து போகிறார் சமுத்திரகனி.

ஒரு கட்டத்தில் அது விபத்து இல்லை, யாரோ வித்யாவை கொலை செய்திருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்கிறார் சமுத்திரகனி. யார் கொலை செய்தார்கள் என்பதை தேடி அலைகிறார் சமுத்திரகனி.

இது ஒரு பக்கம் செல்ல, மறுமுனையில் சிருஷ்டி டாங்கேயின் வீட்டில் வேலை பார்க்கும் பெண்ணின் மகள் தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் பூச்சி மருந்தை குடித்து மருத்துவமனையில் சீரியஸாக சேர்க்கப்படுகிறார். இதனால் சிருஷ்டி டாங்கே மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கிறார்.

இந்த மறு கூட்டலுக்கு விண்ணப்பித்த விவகாரம் கல்வியமைச்சர் ராதாரவியின் பி.ஏ.வுக்கு தெரிய வர.. அவர் தனது அடியாட்களுடன் சிருஷ்டி டாங்கேவின் வீட்டுக்கு வந்து அவரை கொலை செய்ய முயற்சிக்கிறார்.

இந்த இரு நிகழ்வுகளுக்குள்ளும் விஜய் வசந்த எப்படி உள்ளே வந்தார்…?? சமுத்திரகனி அந்த கொலைகார கும்பலை கண்டுபிடித்தாரா..?? சிருஷ்டி டாங்கேவை அந்த ரவுடி கும்பலிடம் இருந்து விஜய் வசந்த் காப்பாற்றினாரா..??? யார் இந்த செயலை செய்கிறார்கள்..?? எதற்காக செய்கிறார்கள் என்பதை மிகவும் விறுவிறுப்போடு சொல்லியிருக்கிறார் இயக்குநர் ராஜபாண்டி.

’சென்னை 28 2’ படத்திற்கு பிறகு விஜய் வசந்த் நடித்திருக்கும் இப்படம் இவருக்கு பெரிதாகவே கைகொடுத்திருக்கிறது என்றே கூறலாம். மிரட்டலான முறுக்கு மீசையுடன் கூடிய கொடூர பார்வையில் ரவுடிகளை துவம்சம் செய்யும் காட்சிகளில் மிரள வைக்கிறார்.

சமுத்திரகனி நேர்மையான போலீஸ் அதிகாரியாக வந்து வழக்கம் போல் நேர்மையாகவே நடித்தும் சென்றிருக்கிறார். இரண்டு பாடல்களுக்கு மட்டும் ஆட்டம் போடும் கதாநாயகியாக இல்லாமல் ஒரு வெயிட்டான ஒரு ரோலும் கொடுக்கப்பட்டுள்ளது சிருஷ்டிக்கு. அதையும் சிறப்பாக செய்திருக்கிறார் சிருஷ்டி.

கல்வியை வியாபாரம் செய்யும் நபர்களுக்கு ராதாரவியின் வசனங்கள் செருப்படி. எந்த படத்திலும் ஏற்றிராத ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார் சரண்யா பொன்வண்ணன்.

கருணாஸின் காமெடி காட்சிகள் சிரிக்கும்படியாக தான் உள்ளது. படத்தின் மிகபெரியபலம் என்றால் அது வசனங்கள் நீண்ட நாளுக்கு பிறகு படத்தின் வசனங்கள் அனல் பறக்குது அது மட்டும் இல்லை நம்மை யோசிக்க வைக்கிறது வசனம் எழுதிய ராதா கிருஷ்ணனை பாராட்டவேண்டும்.

பிரேம்ஜியின் ஒரு இசையில் ஒரு பாடலை தவிர மற்ற பாடல்கள் எதுவும் மனதில் நிற்கவில்லை. பின்னணி இசை பெரிதாக இல்லை.

ஆங்காங்கே காணும் சில லாஜிக் விஷயங்களை கவனித்திருக்கலாம்.

கல்வி துறையில் நடக்கும் உள் விஷயங்களை வெளிக்கொணர்ந்த துணிச்சலுக்கு இயக்குநருக்கு பெரிய பாராட்டுகளை தெரிவிக்கலாம்.

அச்சமின்றி – அசராமல் பயணம் புரியும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *