பாகுபலி 2 – விமர்சனம்


இந்திய சினிமா மட்டுமல்ல உலக சினிமாவும் வியந்து வழி மேல் விழி வைத்துக் காத்துக் கொண்டிருந்த படம் தான் பாகுபலி 2. பாகுபலி படத்தின் முதல் பாகத்தில் எழுந்த கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார், தேவசேனா எப்படி கைது செய்யப்பட்டார் என பல கேள்விகளுக்கு பதில் கொடுக்கும் விதமாக இரண்டாம் பாகம் வெளிவந்திருக்கிறது. முதல் பாகத்தில் எடுக்கப்பட்ட ஒரு வேகம் இரண்டாம் பாகத்தில் எடுபட்டதா என பார்க்கலாம்.

முதல் பாகத்தின் தொடர்ச்சியாக காலகேயனையும் அவனது கூட்டத்தையும் வதம் செய்த பிறகு பாகுபலி அரசனாக மூடி சூட்டுவதற்கு முன் தாய் சிவகாமியின் உத்தரவுக்கிணங்க நாட்டினை வலம் வருகிறார் பாகுபலி. அப்போது சிற்றரசு சாம்ராஜ்ஜியத்தின் இளவரசியாக வரும் அனுஷ்காவை (தேவசேனா) சந்தித்ததும் அவர் மீது காதல் வயப்படுகிறார். அனுஷ்காவும் பாகுபலி மீது காதல் கொள்கிறார்.

இந்த விஷயம் பாகுபலியின் அண்ணனாக வரும் பல்வாள்தேவனின் செவிகளுக்கு வர தனது சூழ்ச்சி வலைகளை தனது தாய் சிவகாமி மூலமாக வீசுகிறார். பல்வாள்தேவனுக்கு தேவசேனாவை மணமுடித்து தருவதாக அவருக்கு வாக்கு கொடுத்து விடுகிறார் சிவகாமி தேவி. சிவகாமி தேவியின் இந்த வாக்கு தவற, அவரின் கோபத்திற்கு ஆளாகிறார் பாகுபலி. அரசபையா, அனுஷ்காவா என வரும்போது தனக்கு தன்னுடைய காதலி தான் வேண்டும் என அரசபையை பல்வாள்தேவனுக்கு கொடுத்து விடுகிறார் பாகுபலி. அரசபை ஏறும் பல்வாள்தேவன் ஆடும் ஆட்டத்தில் முதல் பாகத்தின் அனைத்து கேள்விகளுக்கு விடை கொடுத்து விடுகிறார்.

தனது ஐந்து வருட உழைப்பையும் முழுமையாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் ராஜமெளலி. ஒரு இயக்குனருக்காக ஒட்டுமொத்த இந்திய சினிமாவும் காத்திருந்தது ராஜமெளலிக்காகதான் இருந்திருக்கக் கூடும். முதல் பாகத்தில் காட்டப்பட்ட அந்த பிரம்மாண்டத்தினை இரண்டாம் பாகத்திலும் வைக்க தவறவில்லை இயக்குனர். கதைக்கு தேவையான இடத்தில் மட்டும் அந்த பிரம்மாண்டத்தை பயன்படுத்தியிருப்பது மேலும் சிறப்பு.

பாகுபலியின் முதல் பாகத்தில் கதாபாத்திரத்தை அறிமுகம் மட்டுமே செய்து வைத்த இயக்குனர் இரண்டாம் பாகத்தில் கதாபாத்திரத்திற்கான தேவையான உயிரோட்டத்தை கொடுத்திருக்கிறார். முதல் பாகத்தில் அழுக்கு படிந்த முகத்தோடு வந்த கட்டப்பா (சத்யராஜ்) இரண்டாம் பாகத்தில் தனது கதாபாத்திரத்தில் அழுத்தம் கொடுத்திருக்கிறார். அவ்வப்போது அவர் அடிக்கும் காமெடிகள் ரசிக்க வைக்கின்றன.

அப்பா, மகன் என இரண்டு கதாபாத்திரத்திலும் தனது பணியை சிறப்பாக செய்திருக்கிறார் பிரபாஸ். இரண்டு கதாபாத்திரத்தையும் மிகவும் கம்பீரம் கொண்டு மிரட்டியிருக்கிறார்.

மகேந்திர பாகுபலியும் பல்வாள் தேவனும் நேரடியாக மோதும் சண்டை காட்சிகள் மிரட்டல். ராணாவும் தனது கதாபாத்திரத்தை மிக கடினமாகவே மெருகேற்றியிருக்கிறார். முதல் பாகத்தில் தமன்னா தேவதையாக வர, இரண்டாம் பாகத்தில் அதற்கான வேலைகளை ஒட்டுமொத்தமாக வாரிக் கொண்டு சென்றுவிட்டார் அனுஷ்கா. அனுஷ்காவா இது என அனைவரும் வியக்கும் அளவிற்கு தனது அழகிலும், துணிச்சலிலும் மிரட்டி எடுத்து விட்டார். அனுஷ்கா சண்டை காட்சிகள் தான் கொஞ்சம் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

ரம்யா கிருஷ்ணன், நாசர், தமன்னா, என மற்ற கலைஞர்களையும் நன்றாகவே வேலை வாங்கியுள்ளார் இயக்குனர் ராஜமெளலி. இனி நீலாம்பரி ரம்யா கிருஷ்ணன் இல்லை, சிவகாமி தேவி ரம்யா கிருஷ்ணன் அப்படியாக தனது கதாபாத்திரத்திற்கு பிரம்மிப்பூட்டியிருக்கிறார்.

படத்திற்கு மேலும் பலம் சேர்க்கிறது பாடல்களும், பின்னனி இசையும். கீரவாணியின் இசையில் அனைத்தும் புதுமை. செந்தில்குமாரின் ஒளிப்பதிவு சுழலடித்திருக்கிறது. இடைவேளைக்கு முன் இருந்த ஒரு வேகம், அதன் பிறகு கொஞ்சம் மெதுவாக பயணித்திருப்பது திரைக்கதையை சற்று தொய்வடைய வைத்திருக்கிறது.

பாகுபலி 2 – இந்திய சினிமா கொண்டாடப்பட வேண்டிய ஒரு படம்.

Note: திரையரங்கில் பார்த்தால் மட்டுமே அந்த பிரம்மிப்பை ரசிக்கவும் வியக்கவும் முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *