எங்கிட்ட மோதாதே – விமர்சனம்

#Rating – 2.8/5

தமிழ் சினிமா என்றாலே இரண்டு தூண்களை வைத்து தான் கணக்கிடப்படும். ஒரு காலத்தில் எம் ஜி ஆர் – சிவாஜி என்றால் அடுத்த கட்டத்தில் நிறுத்தப்பட்ட இரு தூண்கள் ரஜினி-கமல் தான். 1980 களில் ரஜினி-கமல் ரசிகர்களுக்குள் ஏற்பட்ட மோதல்கள், புரிதல்கள் என அனைத்தையும் கண்முன்னே கொண்டு வர வைத்திருக்கும் ‘எங்கிட்ட மோதாதே’ படத்தின் விமர்சனத்தை தான் தற்போது பார்க்க போகிறோம்.

நட்ராஜ் – ராஜாஜி இருவரும் நண்பர்கள். இருவரும் கட்-அவுட் வரைபவர்கள். நட்ராஜ் ரஜினி ரசிகர். ராஜாஜி கமல் ரசிகர். ஊருக்குள் ரஜினி – கமல் படம் வெளிவந்தால் தங்கள் தலைவரின் கட்-அவுட்களை வரைவது தான் இருவருக்குமான வேலை.

படம் முழுக்க முழுக்க திருநெல்வேலியை சுற்றி வலம் வருகிறது. ரஜினி-கமல் படத்தினை திரையிடும் போதெல்லாம் அங்குள்ள திரையரங்குகள் அனைத்தும் ரசிகர்களால் சூறையாடப்படுகிறது. அப்படி சூறையாடப்படும் திரையரங்குகளில் ஒரு திரையரங்கு ராதாரவிக்கு சொந்தமானது.. அரசியல் பலத்தோடு லோக்கல் தாதாவாக வலம் வருகிறார் ராதாரவி.

இதனால் திருநெல்வேலிக்குள் ரஜினி-கமல் படத்தை திரையிட மறுக்கிறார் ராதாரவி. இதனால் வரும் மோதல்கள், நட்புக்குள் ஏற்படும் பிரிதல், காதல் என அனைத்தும் ஒரு சேர பயணிக்கும் கதை தான் இந்த ‘எங்கிட்ட மோதாதே’.

உண்மையாகவே ரஜினி ரசிகரான நட்டி, படத்திலும் அதே கெட்டப் என்பதால் ரஜினியின் நடை, ஸ்டைல் என ஒவ்வொன்றிலும் தலைவரின் பிரதிபலிப்பை காண்பிக்கிறார். சிகரெட் பிடிப்பதில் இருந்து தனது டயலாக்கை பேசும் வரை அனைத்திலும் தலைவரின் வாசனை.

ராஜாஜியின் நடிப்பும் அருமை. வீர வசனம், கோபம் என அனைத்தையும் வெளிப்படுத்தும் அவருக்கு ஆக்‌ஷன் காட்சிகள் இல்லாதது ஏமாற்றம் தான். சஞ்சிதா ஷெட்டி, பார்வதி நாயர் இருவரும் கதாநாயகிகளுக்கான வேலைகளை செய்துள்ளார்கள்.

ராதாரவி – தான் ஒரு சீனியர் நடிகர் என்பதை பல இடங்களில் காண்பித்து செல்கிறார். தனது உடலமைப்பிலே பதிலை கூறிவிடுகிறார். படத்தின் ஒரு சில காமெடி சரவெடிகள் கலகலப்பூட்டுகின்றன.

80 களில் ரஜினி-கமல் ரசிகர்கள் மோதிக் கொள்வது மட்டுமல்லாமல் பல பொதுநலத் தொண்டுகளையும் மாறி மாறி மக்களுக்கு செய்துள்ளனர். அதையும் கண்முன்னே வந்து நிறுத்தியிருக்கிறார்கள்.

ரசிகர்களின் மோதல்களை அரசியல்வாதிகள் எப்படி பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதையும் காட்சிகளில் கொண்டு வந்திருக்கிறார்கள். காதல் காட்சிகளில் இரு நாயகர்களும் சொதப்பி உள்ளனர். பாடல்கள் பெரிதாக கவரவில்லை.

தனது கேமராவில் இன்னும் கொஞ்சம் திருநெல்வேலியை அழகுபடுத்தி காண்பிருத்திருக்கலாம் கணேஷ் சந்திரா அவர்களே.

கதையின் கரு ஓகே என்றாலும், அதை எடுத்துச் செல்லும் விதத்தில் இயக்குனர் சற்று தடுமாறியிருக்கிறார் என்று தான் கூற வேண்டும்.

எங்கிட்ட மோதாதே – அந்நாள் ரசிகர்களின் செயல்பாடுகளை பார்ப்பதற்காகவே ஒருமுறை திரையரங்கிற்கு பயணம் புரியலாம்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *