இருமுகன் – விமர்சனம்

Irumugan Tamil Movie Review

ஷங்கரின் ‘ஐ’, பத்து எண்றதுக்குள்ள என சில சறுக்கலுக்குப் பிறகு சிறிய பிரம்மாண்டமாய் தனது இருமுகனை கையில் எடுத்திருக்கிறார் விக்ரம். ஏ ஆர் முருகதாஸின் பட்டறையில் இருந்து வந்து ‘அரிமா நம்பி’ என்ற வெற்றி படத்தை இயக்கிய ஆனந்த் சங்கர் தான் இந்த படத்தினை இயக்கியுள்ளார். இருமுகன் விக்ரமின் வாழ்க்கையில் இறங்குமுகமா?? அல்லது ஏறுமுகமா?? என்று இந்த விமர்சனம் மூலம் தெரிந்து கொள்ளலாம்….

மலேசியாவில் உள்ள இந்திய தூதரகத்தை 70 வயது முதியவர் தனி ஒருவனாக நின்று அதை துவம்சம் செய்து விடுகிறார். இவருக்குள் எப்படி இவ்வளவு பெரிய பலம் வந்தது என ஆராய்கையில் காரணம் ‘லவ்’ என தெரிகிறது. இப்படத்தின் வில்லன் பெயர் தான் ‘லவ்’.

மனைவி இழந்த சோகத்தில் இருக்கும் ’ரா’ பிரிவு போலீஸ் அதிகாரி விக்ரமிடம் இந்த வழக்கை ஒப்படைக்கிறது இந்தியன் போலீஸ். பின், தனது உதவியாளர் நித்யா மேனனுடன் மலேசியா செல்கிறார் விக்ரம்.

ஒருவழியாக விக்ரம், வில்லன் ‘லவ்’வை கண்டுபிடித்து விடுகிறார். ’லவ்’ ஸ்பீடு என்ற ஒரு மருந்தை கண்டுபிடித்து வைத்திருக்கிறார். இந்த மருந்தை மனித உடம்பிற்குள் செலுத்தினால் 5 நிமிடத்திற்கு பல மடங்கு பலசாலியாக இருப்பான் அந்த மனிதன். அந்த மருந்தினை உலகம் முழுவதும் அனுப்ப திட்டம் தீட்டி வைத்திருக்கிறார் லவ்.

அந்த திட்டத்தை விக்ரம் உடைத்தெறிந்தாரா..?? அல்லது ‘லவ்’வின் வலையில் விக்ரம் சிக்கினாரா..?? என்பதை பல பல ட்விஸ்டுகளுடன் திரைக்கு கொண்டுவந்திருக்கிறார் இயக்குனர் ஆனந்த் ஷங்கர்.

விக்ரமின் பலமே உழைப்பு..உழைப்பு.உழைப்பு… ஒவ்வொரு படத்திற்கும் அவ்வளவு உழைப்பு, மெனக்கெடல் என தனக்கே உரித்தான வேலைகளை மிகவும் பூர்த்திகரமாக செய்திருக்கிறார். மற்ற படத்தினை போலவே தனி ஒருவனாக தான் இந்த படத்தின் மொத்த கதையையும் தூக்கி செல்கிறார் விக்ரம்.

’ரா’ அதிகாரியாக வந்து தனது ஆக்‌ஷனில் மிரட்டும் விக்ரம், ‘லவ்’ கதாபாத்திரத்தில் மற்றொரு பக்கம் வில்லனாகவும் மிரட்டியெடுத்திருக்கிறார். ’லவ்’ கதாபாத்திரத்தினை மிகவும் நேர்த்தியாகவும், கச்சிதமாகவும் செய்திருக்கிறார் விக்ரம். ’லவ்’ கதாபாத்திரத்திற்கு இவரே குரல் கொடுத்து பேசியிருப்பது மேலும் சபாஷ்.

நயன்தாரா படத்தில் பெரிய ட்விஸ்ட். முக்கியமான காட்சியில் தோன்றி அனைவரையும் நிமிர்ந்து நிற்க வைக்கிறார். ஆனால் காட்சிகளில் தோன்றிய நேரத்தை விட பாடல்களில் தான் அதிகம் தோன்றியிருக்கிறார் என்று தான் கூற வேண்டும். அழகான, க்யூட்டான நடிப்பில் அனைவரையும் ஈர்த்து வைத்துவிடுகிறார் நயன்.

விக்ரமின் உதவியாளராக தோன்றியிருக்கிறார் நித்யா மேனன். எப்போதுமே காதல், பாடல் என இருந்த நித்யாமேனனை ஒரு சீரியஸான போலீஸ் அதிகாரியாக மாற்றியிருக்கிறார் இயக்குனர். வலுவான ஒரு கதாபாத்திரம் இல்லை என்றாலும், கதைக்கு ஏற்ற பாத்திரமாக ஏற்றுக் கொள்ளதான் வேண்டியிருக்கு.

இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ்ஜின் இசையில் ‘ஹலேனா’ பாடல் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் ரகம். பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார். ராஜசேகரின் ஒளிப்பதிவில் மலேசியா மிக மிக அழகாக தெரிகிறது. சண்டைக்காட்சிகள் மிகவும் மிரட்டலாக கொடுத்திருப்பது படத்திற்கு பலம் தான்.

பல இடங்களில் லாஜிக் உதைப்பது, மலேசிய போலீஸிடம் இருந்து வில்லன் தப்பிப்பது, பின்னர் ஹீரோ தப்பிப்பது அவ்வளவு எளிதான ஒரு காரியமா இயக்குனர் அவர்களே..?? முதல் பாதியில் இருந்த ஒரு வேகத்தை இரண்டாம் பாதியிலும் செலுத்தியிருக்கலாம்.

எனினும் வழக்கம் போல் விக்ரமிற்காக கண்டிப்பாக பார்க்கலாம்…

இருமுகன் – தனி ஒருவனாக ‘விக்ரம்’.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *