என்னை பிடிக்கலைனா என்னை பார்க்காதீங்க; கொந்தளித்த ஜெயம் ரவி!

 

கடந்த 23ஆம் தேதி வெளியான ஜெயம் ரவியின் வனமகன் திரைப்படமும், 30ஆம் தேதி வெளியான கௌதம் கார்த்திக்கின் இவன் தந்திரன் படமும் நல்ல விமர்சனங்களோடும், ரசிகர்களின் ஆதரவோடும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தன. அந்த நேரத்தில் மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி அல்லாமல் மாநில அரசு தனியாக 30 சதவீத கேளிக்கை வரியை தமிழ் சினிமா மீது விதித்தது. இதனால் தமிழ்நாடு முழுக்க உள்ள திரையரங்குகள் ஜூலை 3ஆம் தேதி முதல் காலவரையரைன்றி மூடப்பட்டன. கேளிக்கை வரியை ரத்து செய்யக்கோரி அனைத்து தமிழ் சினிமா சங்கங்களும் தமிழக அரசோடு பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இந்நிலையில் திரையரங்குகள் ஸ்ட்ரைக்கை வாபஸ் பெற்று நாளை திரையரங்குகளை திறக்க இருப்பதாக அறிவித்துள்ளனர். இதுகுறித்து பேச வனமகன் மற்றும் இவன் தந்திரன் படக்குழுவும் இணைந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.

இந்த சந்திப்பில் ஜெயம் ரவி, இயக்குனர் விஜய், தயாரிப்பாளர் அழகப்பன், கௌதம் கார்த்திக், ஆர்.ஜே.பாலாஜி, இயக்குனர் கண்ணன், தயாரிப்பாளர் தனஞ்செயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதற்கு முன்பு இப்படி ஒரு மாபெரும் ஸ்ட்ரைக்கை நான் பார்த்தது இல்லை, திடீரென இந்த ஸ்ட்ரைக் அறிவித்து விட்டார்கள். தமிழக அரசு வரி விதித்தது எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது. திரையரங்குகள் மீது பழி சுமத்த முடியாது, ஏனெனில் தமிழ்நாடு அரசு திடீரென கேளிக்கை வரியை கொண்டு வந்து விட்டது என்றார் தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன்.

நான் இந்த படம் இல்லைனா வேற படத்தில் நடிக்க போய் விடுவேன், ஆனால் இயக்குனர் கண்ணனுக்கு அப்படி இல்லை. ரொம்ப கஷ்டத்தில் தான் இந்த படத்தை எடுத்திருக்கிறார். ரங்கூன் ஏதோ ஒரு படம் ஓடிருச்சுனு இல்லாம, அடுத்தடுத்து ஹிட் என்றாகியிருக்க வேண்டியது. கடவுள் புண்ணியத்தால் நாளை மீண்டும் ரிலீஸாகிறது. தமிழ் சினிமாவில் பல தேவையில்லாத சின்ன சின்ன விஷயங்களை குறைத்தால் சினிமா இன்னும் சூப்பராக இருக்கும். மக்கள் எப்போதுமே கோடிகளில் புரளும் சினிமாக்காரர்களுக்கு என்ன பிரச்சினை என்ற கோணத்திலேயே பார்க்கிறார்கள். இங்கும் பல பிரச்சினகள் இருக்கு. திரையரங்குகளின் ஸ்ட்ரைக் முடிவுக்கு வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. நாளை முதல் மீண்டும் படங்கள் திரையிடப்படும், எல்லோரும் தியேட்டருக்கு வந்து படத்தை பாருங்கள் என்றார் ஆர்.ஜே.பாலாஜி.

வனமகன் படம் இயக்குனர் விஜயின் கனவுப்படம். வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தது. அது மீண்டும் தொடர வேண்டும். படத்தை விளம்பரப்படுத்திய பல ஊடக நண்பர்களும், நீங்கள் கஷ்டப்படும் இந்த சூழலில் எங்களுக்கு பணம் வேண்டாம் என்று சொல்லி எங்களுக்கு ஆதரவு தந்தனர் என்று கூறினார் தயாரிப்பாளர் தனஞ்செயன்.

இரண்டாவது வாரம் 30 திரையரங்குகள் அதிகமாகி, வினியோகஸ்தர்கள் சந்தோஷப்பட்டு, வணிக வெற்றி பெறும் என்று நம்பிக் கொண்டிருந்த வேளையில் தான் இந்த ஸ்ட்ரைக் ஆரம்பித்தது. நான், இயக்குனர் கண்ணன் எல்லாம் தயாரிப்பாளர் ஆனது ஒரு விபத்து. இதற்கிடையில் சிடியில் நிறைய பேர் பார்த்து விட்டு என்னிடம் பேசினார்கள். இதே மாதிரி ஒரு அனுபவம் தான் தலைவா படத்தின் போதும் எனக்கு ஏற்பட்டது. எனக்கே கூட தெலுங்கு சினிமா அல்லது விளம்பரப் படம் எடுக்க போய் விடலாமா என்று தோன்றியது. இந்த சினிமாவை நம்பி பல ஆயிரம் குடும்பங்கள் இருக்கின்றன. நீங்கள் தான் ஆதரவு தர வேண்டும் என்றார் இயக்குனர் விஜய்.

வாட்ஸாப்பில் நான் வெளியிட்ட ஆடியோ ஒரு தனிப்பட்ட மனிதனின் வலி இல்லை. ஒட்டு மொத்த தயாரிப்பாளர்கள், இயக்குனர்களும் இன்று அந்த வலியை அனுபவித்து வருகிறார்கள். இரண்டு வருடம் கஷ்டப்பட்டு ஸ்க்ரிப்ட் எழுதி எடுத்த படம். வேறு ஒரு தயாரிப்பாளர் கடைசி நேரத்தில் விலகியதால் நான் தயாரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த கஷ்ட காலத்தில் உடன் நின்ற எல்லாருக்கும் நன்றி என்றார் இயக்குனர் கண்ணன்.

பல ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்படுவதை பார்த்து மிகவும் மனம் உடைந்து போனேன். நடிகர்கள் வெளியில் தான் தன்னம்பிக்கையோடு தெரிவோம். உள்ளுக்குள் பாதுகாப்பற்ற நிலையை தான் உணர்கிறோம். அந்த சமயத்தில் ரசிகர்களின் ஆதரவு தான் எங்களுக்கு பூஸ்ட். நிறைய இடங்களில் நாங்கள் கேட்காமலேயே திருட்டு விசிடியை ரசிகர்கள் தடுத்திருக்கிறார்கள். முழு அனுபவம் தியேட்டரில் தான் கிடைக்கும். என்னை பிடிக்கலைனா என்ன பார்க்காதீங்க, மற்றவர்களின் உழைப்பை மதித்து படத்தை பாருங்க என்றார் கௌதம் கார்த்திக்.

மே மாதமே வனமகன் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தும் தயாரிப்பாளர் சங்கம் ஸ்ட்ரைக்னு சொன்னதை மதித்து படத்தை ஜூன் மாதத்திற்கு தள்ளி வைத்தோம். பல தடங்கல்களை தாண்டி ரிலீஸ் செய்திருக்கிறோம். சினிமா துறையினருக்கும் கஷ்டம் இருக்கும் என்பது ஏன் எல்லோருக்கும் புரிவதில்லை. நம் தமிழ்நாட்டுக்கு சினிமா தான் ஒரே கொண்டாட்டம். பல நல்ல விஷயங்களும் சினிமாவில் தான் சொல்லப்படுகின்றன. அதை அழிய விடக்கூடாது என்றார் ஜெயம் ரவி.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *