கருப்பன் – விமர்சனம்

விஜய் சேதுபதிக்கு தான் தொட்டதெல்லாம் ஹிட் அடிக்கும் காலம் இது. இவர் முதல் முறையாக கிராமத்து கதை களத்தில் களமிறங்கியிருக்கும் படம்தான் ‘கருப்பன்’. இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக தான்யா நடித்துள்ளார். கருப்பனின் ஆட்டம் என்னவென்று விமர்சனம் மூலம் காணலாம்.

கருப்பனாக வரும் விஜய் சேதுபதி மாடு பிடி வீரர். ஜல்லிக்கட்டு நடக்கும் போது பக்கத்து ஊர்க்காரரான பசுபதி தன்னுடைய மாட்டை அடக்கினால் எனது தங்கையை கல்யாணம் செய்து தருவதாக கூற விஜய் சேதுபதியும் காளையை அடக்கி விடுகிறார்.

அண்ணன் பசுபதி கொடுத்த வாக்குக்காகவும், தன்னுடைய அண்ணன் யார் முன்னிலையிலும் தலை குனிய கூடாது என்பதற்காக மட்டுமல்லாமல் விஜய் சேதுபதியின் நல்ல குணம் அறிந்த தான்யா அவரை திருமணம் செய்து கொள்கிறார்.

தான்யா தனக்கு மட்டுமே சொந்தம் என்று சிறு வயதில் இருந்தே அவர் மீது காதல் வயப்பட்டு அவரை திருமணம் செய்ய ஏங்கிக் கிடந்த தாய் மாமன் பாபி சிம்ஹாவிற்கு பெருத்த ஏமாற்றமே.

தான்யாவோடு நான் மீண்டும் வாழ்வேன் என்று விஜய்சேதுபதி-தான்யாவை பிரிக்க சில பல சித்து விளையாட்டுகளை விளையாடுகிறார் பாபி சிம்ஹா. முடிவு என்ன என்பதே படத்தின் கதை.

விஜய் சேதுபதியின் நடிப்பை இனியும் பெருமைபடுத்தியோ அல்லது அவர் இப்படி நடிக்க வேண்டும் அப்படி நடிக்க வேண்டும் என்று அட்வைஸ் கூறும் காலம் எல்லாம் கடந்து விட்டது. அவர் நடிப்பே வெற லெவல் தான். சென்னையில் மட்டுமே சுற்றிக் கொண்டிருந்த விஜய் சேதுபதி என்ற காளையை மதுரை ஏரியாவிலும் களமிறக்கியுள்ளார் இயக்குனர். அங்கும் அந்த காளை தனது ஆட்டத்தை வெகு சிறப்பாக ஆடி முடித்திருக்கிறது.

தான்யா இதற்கு முன் இரண்டு படங்களில் நடித்திருந்தாலும், இந்த படமே இவருக்கு ஒரு பிரேக் கொடுக்கலாம். குடும்ப பெண்ணாக, கிராமத்து பெண்ணாக நடித்து அனைவரின் மனதிலும் இடம் பிடிக்கிறார். இன்னும் சில படங்களில் இவர் டாப் ஹிரோயின்களின் பட்டியலில் இடம் பிடிப்பார்.

இப்படிபட்ட படங்களின் கதையையே பாபி சிம்ஹா தேர்ந்தெடுத்து நடிக்கலாம். இதுவே இவருக்கு பொருத்தமான ஒன்று தான். கடைசி வரைக்கும் இவன் தான் வில்லன் என்று விஜய் சேதுபதிக்கு தெரியாமல் படத்தை நகர்த்தியிருப்பது இயக்குனரின் திறமை.

பசுபதி கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்து முடித்திருக்கிறார். ஆங்காங்கே ஒலிக்கும் சிங்கம் புலியின் காமெடி சிரிக்க வைக்கிறது. இமானின் இசையில் பாடல்கள் ஒன்றுகூட மனதில் பதியவில்லை. பின்னனி இசை கூட ஓகே ரகம் தான்.

சக்திவேலின் ஒளிப்பதிவு கலர்புல்லாக காட்சியளிக்கிறது. ரேணி குண்டா என்ற வித்தியாசமான கதையோடு தமிழ் சினிமாவிற்குள் வந்த இயக்குனர் பன்னீர் செல்வம், இந்த படத்தில் வித்தியாசமாக எதையும் கூறவில்லை என்றாலும், கணவன் மனைவிக்குமிடையேயான புரிதலையும், காதலை வெளிப்படுத்திய விதத்திற்காகவும் இயக்குனருக்கு ஒரு பூங்கொத்து வழங்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *