கவலை வேண்டாம் – திரைவிமர்சனம்

kv

ஜீவா மற்றும் காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகியுள்ளது ‘கவலை வேண்டாம்’. யாமிருக்க பயமேன் வெற்றி படத்தை இயக்கிய இயக்குநர் ‘டீ கே’ இப்படத்தை இயற்றியுள்ளார்.

ஜீவா மற்றும் காஜல் அகர்வால் இருவரும் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பயணம் புரிய இப்படத்தினை வெற்றி கொடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அந்த வகையில் பெரும் எதிர்பார்ப்புடன் நேற்று வெளியான இப்படம் இருவருக்கும் எந்த வகையில் அமைந்துள்ளது என்பதை காணலாம்.

ஜீவா-காஜல் இருவருக்கும் திருமணமாகி இரண்டு நாட்கள் கூட இணைந்து இல்லாமல் பிரிந்து விடுகிறார்கள். மூன்று வருடங்களுக்குப் பிறகு காஜல், பாபி சிம்ஹாவை திருமணம் செய்து கொள்ள நினைக்கிறார்.

இதற்காக விவாகரத்து பெறுவதற்காக மீண்டும் ஜீவாவை சந்திக்கிறார் காஜல். என்னுடன் ஒரு வார காலம் மனைவியாக வாழ்ந்தால் மட்டுமே விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்திடுவதாக கூறிவிடுகிறார் ஜீவா.

அந்த ஒரு வார காலத்தில் ஜீவாவும் காஜலும் இணைந்தார்களா அல்லது ஜீவா விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்திட்டாரா..?? என்பதை மிகவும் நகைச்சுவை உணர்வோடு கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குநர் டீ கே.

இது தான் தன்னோட ரூட் என்பதை புரிந்து நடித்திருக்கிறார் ஜீவா. அதற்கு சில படங்களின் தோல்வி தேவைப்பட்டிருகிறது போல. காஜலுக்கு ஏற்ற ஜோடியாக இருக்கிறார் ஜீவா.

காஜலுக்கும் பல படங்களுக்குப் பிறகு இதில் மிகப்பெரிய ஸ்கோப் கிடைத்திருக்கிறது. தனது குண்டு கண்களின் மூலம் அதிகமான இடங்களில் தனது நடிப்பினை காட்டியிருக்கிறார். ஜீவாவிற்கும் காஜலுக்கும் இடையேயான காதல் காட்சிகள் மிகவும் கச்சிதமாக பொருந்தியிருக்கிறது.

படத்தின் மிகப்பெரிய பலமே காமெடி காட்சிகள் மட்டுமே. ஆர் ஜே பாலாஜி, பால சரவணன், மயில்சாமி என மூவரும் காமெடியில் கலக்கியிருக்கிறார்கள். படத்திற்கு தேவையான காமெடிக் காட்சிகளை வைத்து விட்டு இரட்டை அர்த்தங்களில் வரும் காட்சிகளை தவிர்த்திருக்கலாம்.

பல இடங்களில் டபுள் மீனிங் வசனங்கள், இளைஞர்களின் மத்தியில் கைதட்டல்களை பெற்றாலும், குடும்பங்கள் படையெடுப்பது சிரமம் தான். லியோ ஜேம்ஸ் இசையில் இரண்டு பாடல்கள் மீண்டும் மீண்டும் கேட்கும் ரகம், பின்னணி இசையிலும் அசத்தியிருக்கிறார். நிச்சயம் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார்

படத்தின் மிகப்பெரிய பலமே அபினந்தன் ராமானுஜத்தின் ஒளிப்பதிவுதான். ஒவ்வொரு காட்சியையும் மிகவும் அழகாக காட்டியிருக்கிறார்.

கவலை வேண்டாம் – கவலையை மறக்க ‘கவலை வேண்டாம்’ செல்லலாம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *