கொடி – விமர்சனம்

kodi

Rating – 3/5

முதல் முறையாக தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் படம் ‘கொடி’. தீபாவளி வெளியீடாக வந்திருக்கும் இப்படத்தை இயக்கியிருக்கிறார் துரை செந்தில் குமார். எதிர் நீச்சல், காக்கி சட்டை என்ற இரு படத்தினை கொடுத்த இயக்குனர் தனது மூன்றாவது படைப்பாக இந்த ’கொடி’யை கொண்டு வந்திருக்கிறார். தனுஷின் பயணத்தில் இந்த கொடி பறந்ததா இல்லையா என்பதை விமர்சனம் மூலம் காணலாம்.

கருணாஸ் மிகப்பெரிய அரசியல்வாதியாக ஆக வேண்டும் என்று ஆசை. ஆனால், அவரால் கேட்கவோ, வாய் பேசவோ இயலாத நிலை. இந்நிலையில் இவருக்கு இரட்டை குழந்தைகள் பிறக்கின்றன. சிறிது நாட்களில் கருணாஸ் ஒரு போராட்டத்தில் தன் உயிரை மாய்த்துக் கொள்கிறார்.

சில வருடங்களுக்குப் பிறகு இந்த குழந்தைகளில் ஒரு தனுஷ் அரசியல்வாதியாகவும், மற்றொரு தனுஷ் கல்லூரி பேராசிரியராகவும் வருகிறார்கள். அரசியல்வாதி தனுஷ் மிகவும் கோபக்காரர், எதிர்கட்சியை சேர்ந்த த்ரிஷாவை காதலிக்கிறார். த்ரிஷாவிற்கு மிகப்பெரிய அரசியல்வாதியாக வேண்டும், பதவிகளில் அமர வேண்டும் என்ற கனவில் இருக்கிறார்.

கல்லூரி பேராசிரியராக வரும் தனுஷ் மிகவும் அமைதியானவர், கோழி முட்டைகளை ஏமாற்றி விற்பனை செய்து வரும் அனுபமாவை காதலிக்கிறார். எதற்காக இப்படி ஏமாற்றி பணம் சம்பாதிக்க வேண்டும் என்று தனுஷ் கேட்க, தனது கிராமத்தில் உள்ள ஒரு பழைய பாதரச தொழிற்சாலையில் உள்ள பாதரசத்தினை நீக்காமல் அங்கேயே வைத்துள்ளதால், கிராமத்தில் உள்ள குழந்தைகள் அதிகமாக இறந்து வருவதாகவும், அவர்களை காப்பாற்றவே இவ்வாறு செய்வதாகவும் அனுபமா கூறுகிறார்.

இந்த பிரச்சனையை பேராசிரியர் தனுஷ் அரசியல்வாதி தனுஷிடம் எடுத்துச் செல்ல, பல விஸ்வரூப பிரச்சனையாக இது உருவெடுக்கிறது. இதனால் த்ரிஷாவுடன் மோதல், பேராசிரியர் தனுஷின் உயிருக்கு ஆபத்து, பல கட்டங்களை கடந்து பிறகு என்ன ஆனது என்பதை மிகவும் சுவார்ஸ்யமாகவும், விறுவிறுப்புடனும் கூறியிருக்கிறார் இயக்குனர்.

சில படங்களுக்கு பிறகு தனுஷ் தனது கதபாத்திரத்தின் வெற்றியை இந்த படத்தில் நிகழ்த்தியுள்ளார் என்று தான் கூற வேண்டும். மிகவும் நேர்த்தியாக அண்ணன், தம்பி வித்தியாசத்தினை வெளிப்படுத்தியுள்ளார் தனுஷ்.

அண்ணனாக வரும் தனுஷ் தாடியுடன் மிகவும் மிரட்டலான ஒரு கெட்டப்பை கொடுத்துள்ளார். ரசிகர்களுக்கு சரியான விருந்தாக வந்திருக்கிறார் இந்த தனுஷ். நடனம், காதல், செண்டிமெண்ட், ஆக்‌ஷன் என அனைத்திலும் புகுந்து விளையாடியிருக்கிறார்.

முதல் முறையாக த்ரிஷா நெகடிவ் ரோல் ஏற்று நடித்திருக்கிறார். ஒரு உண்மையான அரசியல்வாதியாகவே மாறி அனைவரையும் மிரள வைத்திருக்கிறார். அரசியலில் உள்ளவர்கள் பதவியை அடைய என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்ற ஒரு ஒன் லைனை மிகவும் கச்சிதமாக பிடித்துக் கொண்டு பயணம் செய்திருக்கிறார் த்ரிஷா.

பிரேமம் நாயகி அனுபமா, தனுஷுடனான காதல் காட்சிகளில் மிகவும் அழகாக இருக்கிறார். மேலும், காளி வெங்கட், சரண்யா பொன்வண்ணன், விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர், விஜயகுமார் ஆகியோர் தங்களது கதாபாத்திரங்களை நேர்த்தியாக செய்திருக்கிறார்.

வெங்கடேஷின் ஒளிப்பதிவு அருமை. சந்தோஷ் நாராயணின் இசையில் பாடல்கள் அனைத்தும் ரகம். பின்னணி இசையில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். இரண்டாம் பாதியில் சற்று வேகத்தை ஏற்றியிருந்தார் இன்னும் நலமாக அமைந்திருக்கும்.

கொடி – ரெட்டை தீபாவளியாக கொடி பறக்குது….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *