மாற்றான்- விமர்சனம் -உள்ளது உள்ளபடி


ஒட்டிப்பிறந்த இரட்டையர்களின் காதல், பிரிவு என பயணப்படும் கதையில் முதல் பாதி வெகு அழகு. ஆனால் அதன் பின், பின் வைத்து காதுல தலையிலன்னு பூ சுத்தும் கே வி ஆனந்தின் கதையாற்றல் நமக்கு கொஞ்சம் தலை சுற்றலை வரவைத்து விடுகிறது.

ஆனால் படம் முழுக்க நம்மை ஆச்சர்யப்பட வைப்பவர் சூர்யா. சமீபத்தில் வெற்றிக்கு நான்தான் காரணம்னு எந்த ஹீரோவாவது சொன்னா மண்டையில தட்டணும்னு சொன்ன கே வி ஆனந்தின் வார்த்தையை பல்லிளிக்க வைத்திருக்கிறார். சூர்யா இல்லன்னா மாற்றான் கண்டிப்பா தோற்றான் ஆகியிருக்கும்.

பத்தாவது மாடியிலிருந்து விழுந்து நொறுங்கப்போகும் ஒரு கண்ணாடி பொருளை கடைசி மாடியில் நின்று பிடித்து உடையாமல் காப்பாற்றி நிற்பது சூர்யா.. சூர்யா மட்டுமே. அபார உழைப்பு..

கதையை இரண்டாம் பாதி நகர்த்த தான் எடுத்த அயன், கோ படங்களை காப்பி அடிக்க ஆரம்பித்துவிட்டார் கே.வி. ஆனால் இரண்டு சூர்யாவை வைத்து எங்கேயும் லாஜிக் மீறாமல் பார்த்துக்கொண்ட விதம் பாராட்டியே ஆகவேண்டும்.இருவரையும் சோகமாக காட்டி சித்தரவதை செய்யாமல் ஜாலியாக, இயல்பாக விளையாட விட்டிருப்பது, அவர்கள் இயங்கும் விதம் என கவிதையை கொட்டியிருக்கிறார்.

சண்டைக்காட்சியில் இருவரும் இணைந்திருக்கும் சதைப்பகுதி கசங்கி பிசங்கி ஐயோ ஏன் இப்படி ஒரு கொடுமையை செய்திருக்கிறார்கள் என மனசு கனக்கிறது?

அழகான மொழிபெயர்ப்பாளராக வருகிறார் காஜல் அகர்வால். ம்ம்ம்… இருங்க வேறு எங்கேயாவது சிறப்பா நடிச்சிருக்காறான்னு ஒரு தடவை ஓட்டிப்பாத்துக்குறேன். ம்கூம்.. அவருக்கு அதிகமான வேலை எதுவும் இல்லை.

என்னதான் ஹீரோயிசமாயிருந்தாலும் ரஷ்யாவை இவ்வளவு கிள்ளுக்கீரையாக பயன்படுத்தி இருக்கக்கூடாதுங்க..அவ்வளவு வீக்காவா இருக்காங்க ரஷ்ய ராணுவம்?!

உண்மையிலேயே பார்சிலோனா ஒலிம்பிக்கில் மாற்றான் சொல்கிற மாதிரி ஊக்க மருந்து பயன்படுத்தப்பட்டதா? அப்படி இல்லையெனில் அது ஒரு நாட்டின் மீது சுமத்தப்படும் எவ்வளவு பெரிய அபாண்டம்? 1992 ல் ரஷ்யா பெற்ற வெற்றியை அசிங்கப்படுத்துவது போலல்லவா? தவிர படத்தில் காட்டப்படும் மெடல் பட்டியலும் இணைய தளங்களில் கிடைக்கும் தகவலும் ஒரே மாதிரி இருப்பதால் ரஷ்யா மீது அப்படியொரு குற்றச்சாட்டு உள்ளதா என்பதும் மிகப்பெரிய கேள்வியாக நம் முன் நிற்கிறது..

அதுவும் பத்து அப்பனுக்கு பொறந்தவன்னு சூர்யாவைப் பார்த்து சச்சின் சொல்றது மகா கேவலம். சூர்யா இந்த வார்த்தைக்கு எப்படி சம்மதித்தார் என்பது ஆச்சர்யம்.

சௌந்தர ராஜன் படத்தை சௌந்தர்ய மாக்கியிருக்கிறார் தனது ஒளிப்பதிவினால். இரட்டையரை ஒளித்துவைக்கும் திறமை, சண்டைக்காட்சி, பாடலில் மெனக்கிட்டிருக்கும் விதம்.. அருமை..

ஆங்.. சொல்ல மறந்துட்டேன்..அப்பாவாக வரும் சச்சின் கேடேகர்-!!!!!.

ஏ. ஜி. எஸ்ஸின் இன்னொரு பிரமாண்ட படம். கொஞ்சம் நீண்ட படம். நீளம் குறைத்தால் சூர்யாவுக்காக பார்க்கலாம். மொக்க, போர், ஐயோ கொடுமை என்ற வார்த்தைக்கு இடமேயில்லாத படம். கொஞ்சம் ஏற்கனவே பார்த்த காட்சிகளின் சாயலும், பாடல்களின் ஒட்டாமையும் காட்சிகளின் நீளமும் படத்தை தொய்வடையச் செய்கிறது அவ்வளவுதான்.

மாற்றான்- சூர்யா ஏமாற்றவில்லை

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *