மீசைய முறுக்கு விமர்சனம்

தனது இசையால் தமிழக ரசிகர்களை மட்டுமல்லாமல் உலக அளவிலும் ரசிகர்களை தன் வசம் வைத்துள்ள ஹிப் ஹாப் ஆதி முதன் முதலாக நடித்து இயக்கியுள்ள படம் ‘மீசைய முறுக்கு’. இவர் மீசையை முறுக்கி தனது ரசிகர்களுக்கு விருந்து அளித்தாரா இல்லையா என்பதை விமர்சனம் மூலம் காணலாம்.

மிடில் கிளாஸ் குடும்பத்தை சார்ந்த விவேக், தனது இரு மகன்களுடன் வசித்து வருகிறார். அதில் மூத்த மகனாக வருகிறார் ஹிப் ஹாப் ஆதி. சிறு வயதில் இருந்து இசை மீது ஒரு பிரியமானவனாக வளர்கிறார் ஆதி.

பள்ளி படிப்பை முடித்ததும் கல்லூரி சேரும் ஆதி அங்கு தனது பள்ளியில் படித்த பெரும் செல்வந்தரின் மகளான ஆத்மிகாவை காதலிக்கிறார். ஒரு கட்டத்திற்கு பிறகு ஆத்மிகாவும் ஆதியை காதலிக்கிறார். ரேக்கிங், கல்லூரி வாழ்க்கை, நண்பர்கள், ஜாலியான நான்கு வருடங்களை கடந்து வாழ்க்கையில் பயணிக்க துவங்கிறார் ஆதி.

இந்நிலையில் ஆதி-ஆத்மிகாவின் காதல் விவகாரம் ஆத்மிகாவின் வீட்டில் தெரிய வர பெரும் பூகம்பம் வெடிக்கிறது. கடைசியாக காதலா…??? வாழ்க்கையா…??? எதை ஆதி தேர்வு செய்தார் என்பதே படத்தின் கதை.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், இசை, நடிகன் என அனைத்திலும் ஆதி ஜெயித்திருக்கிறார். தனக்கான கதாபாத்திரத்தை தெளிவாக எடுத்திருக்கிறார். தந்தையாக வரும் விவேக்காக இருக்கட்டும், நண்பனாக வரும் விக்னேஷ்காந்தாக இருக்கட்டும் அனைவரும் சரியான தேர்வு தான்.

அனைத்து இளைஞர்களும் தனது அப்பா இப்படி தான் இருக்க வேண்டும் என்று எண்ணும் காதாபாத்திரத்தில் வரும் விவேக் நிமிர்ந்து நிற்கிறார். கதாநாயகியாக வரும் ஆத்மிகா தமிழ் மண்ணின் அழகால் ஜொலிக்கிறார்.. நடிப்பிலும் தான்.

ஆதியின் நண்பனாக வரும் விக்னேஷ்காந்த் தோன்றும் காட்சிகள் அனைத்திலும் சிரிப்பு சரவெடி தான். நண்பர்களின் முக்கியத்துவத்தை தூக்கி நிறுத்தியிருக்கிறார் ஆதி.

கல்லூரி காலங்களின் நினைவுகளை அலையடிக்க வைத்திருக்கிறார். யூ டியூபில் பாடல்களை அனைத்தும் ஏற்கனவே ஹிட் அடித்துள்ள நிலையில் பின்னனி இசையிலும் மிரட்டியெடுத்திருக்கிறார்.

‘தோத்தாலும் ஜெயித்தாலும் மீசைய முறுக்கு’ என விவேக் தனது மகனிடம் ஒவ்வொரு முறை கூறும் போது திரையரங்கமே அதிர்கிறது.

பல இளைஞர்களுக்கு இப்படத்தின் மூலம் வாய்ப்பு வழங்கியிருக்கிறார் ஆதி..

மீசையை முறுக்கு – முதல் பயணத்தை வெற்றியோடு துவங்கியிருக்கிறார் ஆதி….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *