மெர்சல் – விமர்சனம்

தளபதி படம் திரைக்கு வந்தாலே அந்நாள் அவரது ரசிகர்களுக்கு தீபாவளி தான். அதிலும் தீபாவளியும் தளபதி படமும் ஒரே நாளில் வந்தால் ரசிகர்களுக்கு வேற என்ன வேண்டும். தமிழ்நாடு மட்டுமல்ல உலகமே சும்மா அதிரும் அளவிற்கு திருவிழா கோலம் தான். அட்லீ இயக்கத்தில் இரண்டாவது முறையாக கைகோர்த்திருக்கும் தளபதி இப்படத்தில் மூன்று கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தெறி படத்தில் கொடுத்த வெற்றியை அட்லீ இந்த படத்திலும் தொடர்ந்திருக்கிறாரா என்பதை பார்த்து விடலாம்.

மருத்துவம் படித்து சமூக சேவை மூலம் அனைவருக்கும் ஐந்து ரூபாய்க்கு மருத்துவ சேவை செய்து வருகிறார் மாறன் விஜய். அவரது சேவையை பாராட்டி ப்ரான்சு நாட்டில் அவருக்கு விருது வழங்கப்படுகிறது. அந்த விருது வழங்கும் விழாவில் தனியார் மருத்துவமனை டாக்டர் ஒருவர் என்னுடைய மருத்துவமனையில் வந்து பணிபுரிந்தால் அளவுக்கு அதிகமான பணம் தருவதாக கூறுகிறார். அதற்கு மாறன் விஜய் மறுத்துவிடுகிறார். அதன்பின் அங்கு நடைபெறும் மாஜிக் ஷோவில் அந்த தனியார் மருத்துவமனை டாக்டர் கொல்லப்படுகிறார்.

டிவி ஷோ ஒன்றில் மாறன் விஜய்யை எஸ் ஜே சூர்யா காண்கிறார். சில ஞாபகங்கள் எஸ் ஜே சூர்யாவிற்கு வந்து செல்ல, மாறன் விஜய்யை கொல்ல கட்டளையிடுகிறார் எஸ் ஜே சூர்யா.

அவரை கொல்லப்போகும் சமயத்தில் சில நிகழ்வுகள் நடைபெற்று கதை நகர்கிறது. அனைத்து கேள்விகளுக்கும் இரண்டாம் பாதியில் பதிலை சொல்லியிருக்கிறார் இயக்குனர் அட்லீ.

விஜய் ஒருவரே மொத்த படத்தையும் தன் தோள் மீது சுமந்து வீறு கொண்டு நடைபோடுகிறார். வெற்றி விஜய், மாறன் விஜய், தளபதி விஜய் என மூன்று கதாபாத்திரத்திற்கும் தனித்தனியே உயிர் கொடுத்து வாழ வைத்திருக்கிறார். மருத்துவராக வரும் விஜய் அனைவருக்கும் உதவும் மனப்பான்மையுடனும், மேஜிக் மேனாக வரும் விஜய் அமைதியாக இருந்து அதகளம் புரியும் மிரட்டல் நாயகனாகவும் அசத்தியிருக்கிறார்.

அதிலும் தளபதி விஜய்யாக வரும் மூன்றாவது கதாபாத்திரம் படத்திற்கான பெரிய பூஸ்ட். மதுரை பகுதி, வேஷ்டி, முறுக்கு மீசை என இவர் ஆடும் அதிரடி ஆட்டத்தில் திரையரங்கமே அதிர்கிறது. படத்தின் மிகப்பெரிய பலமே தளபதி கதாபாத்திரம் மட்டுமே.

மருத்துவத்தின் தேவையையும், மருத்துவத்தின் ஊழலை தோலுறித்தும் மிக வெளிப்படையான கதையை கையில் எடுத்து படம் நகர்கிறது.

‘இன்று சிசேரியன் என்றால் ஆச்சரியப்படும் மனிதர்கள், இன்னும் 30 வருடம் கழித்து சுக பிரசவம் என்றால் ஆச்சரியமாக பார்ப்பார்கள்.’ என உண்மையை கூறுவது போல வசனங்கள் ஆங்காங்கே தெறிக்கின்றன. மருத்துவத்தை பிசினஸாக பார்க்கும் எதிரிக்கும் மருத்துவத்தை சேவையாக செய்து வரும் ஹீரோவிற்கும் நடக்கும் ஒரு ஆட்டமே இந்த மெர்சல்.

வடிவேலுவின் காமெடி காட்சிகள் ஒரு சில இடங்களில் மட்டுமே ரசிக்க வைக்கிறது. சமந்தா, காஜல் பாடல் காட்சிகளுக்கு மட்டும் தான் தேவைப்பட்டிருக்கிறார்கள்.

எஸ் ஜே சூர்யா தனது வில்லத்தனத்தை மிகவும் மெல்லிய கோட்டில் பயணம் செய்ய வைத்து மிரட்டியிருக்கிறார். நித்யா மேனன் மற்றும் தளபதி இருவருக்குமான ஹெமிஸ்ட்ரி காட்சிகள் நன்றாகவே செட் ஆகியிருக்கிறது.

ஏ ஆர் ரகுமானின் இசையில் ஆளப்போறான் தமிழன் ரிப்பீட் மோட், பின்னனி இசையில் ஏ ஆர் ரகுமானின் கவனம் சிதறல்… இன்னும் மாஸாக பட்டையை கிளப்பியிருக்கலாமோ என்று தோன்றியது.

விஷ்ணுவின் ஒளிப்பதிவு கலர்புல். சண்டைக்காட்சிகளை மிகவும் நேர்த்தியாக ஒளிப்பதிவு செய்துள்ளார் விஷ்ணு.

படத்தின் நீளம் சற்று அதிகமாக இருந்த ஒரு ஃபீல்…..

மெர்சல் – மெரட்டல்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *