மொட்ட சிவா கெட்ட சிவா – விமர்சனம்

Rating – 2.5/5

பேய் படங்களின் ஹீரோ என அழைக்கப்பட்ட லாரன்ஸ், அந்த தளத்திலிருந்து சற்று விலகி கமர்ஷியல் கலந்த கலவையாக ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தை கொடுத்திருக்கிறார். எப்படியோ படம் வெளியே வந்திடுச்சி என கூறும் அளவிற்கு அவ்வளவு நூடூல்ஸ் கலந்த பிரச்சனைகளை தாங்கிக் கொண்டு வெளிவந்திருக்கிறது இந்த படம். ரசிகர்களிடையே எந்த மாதிரியான விமர்சனத்தை பெற்றுள்ளது என்று பார்த்து விடலாம்.

சென்னை சிட்டியை தன் கண்ட்ரோலில் வைத்திருக்கும் ஜிகே என்ற தாதா ஒரு எம்பி(Member Of Parliment) . தனது அரசியல் பயணத்திற்கு பிறகு தனது உடன் பிறந்த தம்பியை மிகப்பெரிய அரசியல்வாதியாக ஆக்க வேண்டும் என்பது ஜிகேவின் எண்ணம்.

ஜிகேவின் செயல்களை ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்து வருகிறார் சென்னை போலீஸ் கமிஷ்னர் சத்யராஜ். பல வழிகளில் சென்று ஜிகே செய்யும் அட்டூழியங்களை தடுக்க முடியாமலும், அவரை கைது செய்ய முடியாமலும் இருக்கிறார் சத்யராஜ். பல இடங்களில் தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி குற்றங்களில் இருந்து தப்பி விடுகிறார் ஜிகே.

அந்த சமயத்தில் அசிஸ்டண்ட் கமிஷ்னராக சென்னைக்கு வருகிறார் ராகவா லாரன்ஸ். லாரன்ஸ் ஆரம்பத்தில் இருந்தே ஜிகே செய்யும் குற்றங்களுக்கு உறுதுணையாக இருந்து ஜிகேவையும் அவனது தம்பியையும் காப்பாற்றி வருகிறார்.

இது சத்யராஜிற்கு பெரும் சவாலாக இருக்க, ஒரு கட்டத்தில் போலீஸ் வேலை என்றால் என்ன என்பதை சத்யராஜ் லாரன்ஸிற்கு வகுப்பெடுக்க, அதிலிருந்து நல்லவன் அவதாரம் பூசிக் கொள்கிறார் லாரன்ஸ்.

பிறகு ஜிகேவையும் அவனது தம்பியையும் லாரன்ஸ் எப்படி பந்தாடுகிறார் என்பதே படத்தின் மீதிக் கதை.

டைட்டில் கார்டிலே ‘மக்கள் சூப்பர் ஸ்டார்’ என்று பட்டத்தோடு லாரன்ஸின் பெயர் வரும் போது அனைவருக்கும் ஷாக் அடிக்கிறது. லாரன்ஸிற்கு போலீஸ் கெட்டப் நன்றாகவே பொருந்தியிருக்கிறது என்றாலும், தமிழ் சினிமாவை பொறுத்தவரை சத்ரியன் விஜயகாந்த், வேட்டையாடு விளையாடு கமல், சாமி விக்ரம், சிங்கம் சூர்யா, என இவர்களின் கெட்டப்பை தமிழ் மக்கள் ஏற்றுக் கொண்டதால் அதே பாணியில் பயணித்திருக்கலாமே.

லாரன்சின் ஆங்காங்கே காமெடி காட்சிகள், டான்ஸ், ஆக்‌ஷன் என அவரது நடிப்பில் குறையேதும் இல்லாமல் இருக்கிறது.

பத்திரிக்கையாளர் சந்திப்பு என்ற ஒன்று நடக்கும் காட்சிகள் சிறிதளவும் ஏற்றுக் கொள்ள முடியாத யதார்த்தம் மீறிய ஒன்று. கமிஷ்னராக சத்யராஜ்ஜை ஏற்றுக் கொள்ளலாம். நிக்கியின் கவர்ச்சி அபார வளர்ச்சி. தொப்புள் தெரிய தாவணி கட்டும் பத்திரிக்கை நிருபரை இந்த படத்தில் பார்க்கலாம். நிக்கியின் சேவை இந்த படத்தில் தேவை இல்லாமல் போய் விட்டது.

லாரன்ஸ் டீமாக வரும் கேவை சரளா, சதீஷ், மொட்டை ராஜேந்திரன், ஸ்ரீமன், மனோபாலா என பலரும் தங்களது வேலைகளை செய்துள்ளனர். வில்லனுக்கேற்ற பொருத்தமான கதாபாத்திரம் ஜிகேவாக வரும் அஷுதோஷ் ராணா. நாடகத் தன்மை காட்சிகள் ஆங்காங்கே அதிகமாக பிரதிபலிக்கின்றன.

படத்தின் சிறிய வலு என்றால் அது ஒளிப்பதிவு மட்டுமே. கதையின் வேகத்திற்கு ஈடு கொடுத்து பயணித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சர்வேஸ் முராரி. அம்ரிஷ் இசையில் ‘ஹர ஹர மகா தேவகி’ பாடல் ஆட்டம் போட வைக்கிறது. பின்னனி இசை காதை பதம் பார்த்து விடுகிறது.

லாஜிக் இல்லாத ஓபனிங் பைட் என ஆரம்ப முதல் கடைசி எண்ட் பைட் வரை ரசிக்கும் படியாக இல்லை. தெலுங்கு திரை உலகிற்குள் போக வேண்டிய சண்டை காட்சிகள் அனைத்தும் தமிழ் சினிமாவிற்குள் சுற்றிக் கொண்டிருக்கிறது.

மொட்ட சிவா கெட்ட சிவா – அதான் டைட்டிலேயே சொல்லிட்டாங்கலே… அப்புறம் நாம என்ன சொல்றது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *