பொறியாளன் – விமர்சனம்

Poriyaalan Movie

கட்டுமான நிறுவனம் ஒன்றில் வேலைபார்க்கும் இளம் பொறியாளன் ஒருவன் தனிக்கடை போட முயற்சி செய்யும்போது ஏற்படும் தடங்கலும், தடை நிவர்த்தியும் தான் கதை..

ஆடுகளம் நரேனின் கட்டுமான நிறுவனத்தில் வேலைபார்க்கும் ஹரீஷ் அங்கே தன் பேச்சுக்கு மதிப்பில்லாததால் தனியாக கன்ஸ்ட்ரக்ஷன் ஆரம்பிக்க முயற்சிக்கிறார். தனது தந்தையிடம் இருந்த பணத்தை வாங்கி நிலம் ஒன்றை வாங்க முயற்சிக்க, பணப்பற்றாக்குறை ஏற்படுகிறது.

கொடூரமாக கந்துவட்டி வசூலிக்கும் தாதா ஒருவரிடம் வேலை பார்க்கும் ஹரீஷின் நண்பன், ஹரீஷின் நிலை அறிந்து, தாதா ஜெயிலுக்கு போனதால், அவன் வருவதற்குள் இரண்டு கோடி ரூபாயை எடுத்து நிலம் வாங்க ரொட்டேஷனுக்கு கொடுத்து உதவுகிறான்..

புரோக்கர் மூலமாக நிலம் வாங்குகிறார்கள்.. பத்திரம் பதிவு செய்கிறார்கள். விற்பனைப்பலகை வைக்கும்போதுதான் அது வேறு ஒருவர் இடம் என்பதும் புரோக்கர் தங்களை ஏமாற்றிவிட்டான் என்பதும் தெரிகிறது. ஹரீஷ் எஸ்கேப் ஆன புரோக்கரை தேட ஆரம்பிக்க, இங்கே ஜெயிலில் இருந்து முன்கூட்டியே ரிலீஸ் ஆகிற தாதா, ஹரீஷின் நண்பன் பணம் கையாடல் செய்ததை கண்டுபிடிக்கிறான்.

ஹரீஷுக்கு இரண்டு நாள் டைம் கொடுத்து, அவரது நண்பனை சிறை பிடித்து வைக்கிறார் தாதா. சீட்டிங் புரோக்கர் சிக்கினானா? பணம் கிடைத்ததா? நண்பன் தப்பித்தாரா? அதுதான் க்ளைமாக்ஸ்..

ரியல் எஸ்டேட், கந்துவட்டி இரண்டையும் சேர்த்து பொறியாளனை உருவாக்கி இருக்கிறார்கள்.. இளம் வயது என்ஜினீயராக முன்னேறத் துடிக்கும் இளைஞனாக ஹரீஷ் கல்யாண் ‘பொறியாளன்’ கதாபாத்திரத்தில் சரியாகவே பொருந்தி இருக்கிறார். குறிப்பாக புரோக்கரால் ஏமாற்றப்பட பதட்டத்தை நன்றாகவே வெளிப்படுத்தியுள்ளார்.

ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு என்பது போல தன் காதலன் என்ன பிரச்சனையில் சிக்கியிருக்கிறான் என்பது தெரியாமல் அடிக்கடி போன் செய்து தொந்தரவு கொடுக்கும் இயல்பான அழகுப்பெண்ணாக ரக்ஷிதாவும் ஓகே.. அதிலும் தன்னிடம் காதலை சொல்லவரும் ஹரீஷையே தனக்கு அண்ணனாக நடிக்க கல்லூரிக்கு அழைத்து செல்வது நல்ல குறும்பு.

மிரட்டல் கந்துவட்டி தாதாவாக வரும் அச்சுத குமார் ஒரு பக்கம் தனது பார்வையாலேயே நம் பி.பியை ஏற்றுகிறார். இன்னொரு பக்கம் சீட்டிங் புரோக்கராக வரும் ‘நாணய குருக்கள்’ மோகன்ராமனும் தன் பங்குக்கு ‘அடப்பாவி’ என சொல்லும்படி போட்டுத்தாக்குகிறார். இவரது கதாபாத்திரம் இன்றைய உலகில் ரியல் எஸ்டேட் பிசினஸில் உலாவரும் பல முகங்களின் சாயல் தான்.

ஹரீஷின் இரண்டு நண்பர்களும் நடிப்புடன் சேர்த்து நட்புக்கரமும் நீட்டியிருக்கிறார்கள்.. கல்லூரி முதல்வராக வரும் டெல்லி கணேஷ், ஹரீஷுக்கு கடைசியாக துப்பு கொடுத்து உதவும் மயில்சாமி, அலம்பல் புரோக்கராக வரும் பாவா லட்சுமணன் என எல்லோரும் எதார்த்த பிரதிபலிப்புகள் தான்.

வேலையில்லா பட்டதாரி படத்தின் சாயல் தெரிய கூடாது என்பதற்காக மெனக்கெட்டிருக்கிறார் இயக்குனர் தாணுகுமார்.. ஆனால் பொறியாளன் என தலைப்பை வைத்துவிட்டு கந்துவட்டி பக்கம் கதை நகர்ந்துவிடுவதுதான் ஏமாற்றத்தை தருகிறது. அதுமட்டுமல்ல இரண்டு வருடங்களுக்கு முன் வந்த ஒரு படத்தின் 50 சதவீத சாயலும் அப்பட்டமாக தெரிகிறது. இருப்பினும் மணிமாறனின் திரைக்கதை பலத்தால் படம் போரடிக்காமல் விறுவிறுப்பாக போவதால் இந்த பொறியாளனை ரசிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published.