ரம் விமர்சனம்

Rating 2.8 / 5

வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுஷிற்கு தம்பியாக நடித்த ரிஷிகேஷ், முதல் முறையாக கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள படம் தான் ‘ரம்’. படத்திற்கு மிகப்பெரிய பலம் என்றால் அது அனிருத்தின் இசை மட்டுமே. இந்த ரம் எவ்வளவு தூரம் போதையை கொடுத்தது என்று பார்க்கலாம்.

ரிஷிகேஷ், அம்ஜத், சஞ்சிதா ஷெட்டி, விவேக், அர்ஜுன் சிதம்பரம் ஆகிய ஐவரும் பல சாதூர்த்தியமான வேலைகள் செய்து கொள்ளையடிக்கும் ஒரு கூட்டம். கொள்ளையடிக்கும் ஒரு பகுதியினை போலீஸ் அதிகாரி நரேனுக்கும் கொடுத்து வருக்கின்றனர். ஒரு முறை விலையுயர்ந்த வைரக் கற்களை நவீன முறையில் இந்த கும்பல் கொள்ளையடிக்கிறது.

கொள்ளையடித்த அந்த வைரத்தை கொண்டு செல்லும் வழியில் ரிஷிகேஷிற்கு நரேன் மீது சந்தேகம் எழ, அந்த வைரக் கற்களை வேறு இடத்திற்கு எடுத்துச் செல்கிறார். நரேனும் அம்ஜத்தும் நண்பர்களாதலால் அம்ஜத் ஆலோசனைப்படி நரேனின் பழைய வீடு ஒன்றில் தங்க வைப்பதற்காக அழைத்துச் செல்கிறார் அம்ஜத், அந்த வீட்டில் பேய் இருப்பது தெரியாமல்.

வைரத்தை எடுப்பதற்காக நரேனை அந்த வீட்டிற்கு அழைத்த மறுகணம் அம்ஜத்தை அங்குள்ள பேய் அடித்து கொன்று விடுகிறது. நரேனும் அந்த வீட்டிற்கு வருகிறார். அதன் பிறகு அங்கு என்ன நடந்தது..??? பேயாக வருபவர்கள் யார்..?? எதற்காக அம்ஜத்தை கொலை செய்தார்கள்..?? என பல கேள்விகளுக்கு பதில் அளித்திருக்கிறார் இயக்குனர் சாய் பரத்.

உங்களுக்கு நடிப்பு வருமா..?? என அடிக்கடி ரிஷிகேஷை பார்த்து கேட்க தோன்றுகிறது. விவேக் இந்த படத்தில் ஒரு இடத்தில் ரிஷிகேஷை பார்த்து இந்த வசனத்தை கூறுவார், ‘டேய்.. இந்த மூஞ்சில நடிப்பே வராதா டா..?? … பொருத்தமான டயலாக் தான்.

சஞ்சிதா ஷெட்டி படம் முழுவதும் பயணிக்கும் கதாபாத்திரம் என்றாலும் பாத்திரத்தில் வலு இல்லை. மியா ஜார்ஜ்ஜிற்கும் அதே நிலை தான். அம்ஜத் சைலண்ட் வில்லனாக மிரட்ட வைக்கிறார்.

மீண்டும் அதிரடி காட்டும் வில்லன் தோரணைக்கு வந்து மிரள வைத்திருக்கிறார் நரேன். படத்தின் மிகப்பெரிய பலம் என்றால் விவேக் மட்டும் தான். இவரது காமெடியில் திரையரங்கில் விசில் சத்தம் விண்ணை பிளக்கிறது.

பழகிப்போன ஒரு கதையை வித்தியாசமான ஒரு கோணத்தில் தர முயற்சித்திருக்கிறார் இயக்குனர். கிராபிக் காட்சிகளில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

அனிருத் இசையில் ஒரு பாடல் ரகம். பின்னனி இசை மிரள வைக்கிறது. விக்னேஷ் வாசுவின் ஒளிப்பதிவு சூப்பர்.

ரம் – இன்னும் கொஞ்சம் போதை ஏற்றியிருக்கலாம்…

Leave a Reply

Your email address will not be published.