சங்குசக்கரம் – விமர்சனம்

ரேட்டிங் – 3.75/5

தமிழ் சினிமாவில் சில மாதங்களாக பேய் படங்களின் ஆதிக்கம் குறைந்திருந்த நிலையில் மீண்டும் பேய் படங்கள் வரிசை கட்டத் துவங்கியுள்ளன.

பேய் படங்கள் என்றால் பயந்து ஒடுங்குவார்கள், ஆனால், அந்த பேயையே கலாய்க்கும் விதமாக ‘சங்குசக்கரம்’ என்ற படம் உருவாகியுள்ளது. முழுக்க முழுக்க குழந்தைகளை மட்டுமே மையப்படுத்தி இக்கதை உருவாகியுள்ளது.

ஒரு ஊரில் ஒரு பழைய மாளிகை இருக்கிறது. அந்த மாளிகையில் பேய் இருப்பதாக பலராலும் நம்பப்படுகிறது. அந்த மாளிகையை விற்பனை செய்ய முயலும் தரகர் ஒருவர், அதில் இருப்பதாகச் சொல்லப்படும் பேயை ஓட்ட இரு மந்திரவாதிகளை அனுப்புகிறார்.

500 கோடி சொத்துக்களோடு உள்ள ஒரு சிறுவனை அந்த வீட்டில் வைத்துக் கொன்றுவிட்டு அந்தச் சொத்துக்களை அபகரிக்க நினைக்கிறார்கள் அவனது காப்பாளர்கள் இருவர்.

விளையாட வேறு இடம் இல்லாததால் அந்த பகுதி சிறுவர்கள் ஏழு பேர் அந்தப் பேய் மாளிகைக்குள் சென்று மாட்டிக்கொள்கிறார்கள். அந்த சிறுவர்களை கடத்தி பணம் சம்பாதிக்க நினைக்கிறான் ஒரு கடத்தல்காரன்.

இப்படி இந்த நான்கு தரப்பும் ஒரே நேரத்தில் அந்தப் பேய் மாளிகைக்குள் மாட்டிக்கொள்கிறார்கள். அந்தப் பேய் மாளிகைக்குள் ஒரு தாய் பேயும் (புன்னகைப் பூ கீதா) ஒரு குழந்தை பேயும் (மோனிகா) இருக்கிறது.

அந்த இரு பேய்களிடம் இருந்து யார் யார் தப்பித்தார்கள் என்பதே மீதிக் கதை.

படத்தின் கதையை எங்கும் நகர்த்தாமல் ஆரம்பத்திலேயே கதைக்குள் சென்றது நலம். கடத்தல்காரனாக வரும் திலீப் சுப்ராயன் அப்லாஷ். தனது காமெடி கலக்கலில் மறு உருவம் காட்டியுள்ளார்.

ஆங்காங்கே நகைச்சுவை, திகில் என அனைத்தும் கலந்து ஒரு கலவையாக கொடுத்திருக்கிறார்கள். தெறிக்கும் வசனங்கள் எழுந்து நின்று கைதட்ட வைக்கிறது.

‘பணம் என்றைக்குமே நிரந்தரம் இல்லை என்று சொன்னவன் எவனும் இப்போ உயிரோடு இல்லை.. ஆனா, பணம் இன்னமும் இருக்கு’

‘கெட்டவங்களை அந்த ஆண்டவன்தான் தண்டிக்கிறது இல்லை…. அந்த பேயாவது தண்டிக்கட்டுமே’

நிறைவறாத ஆசைகளோடு சாகுறவங்க தான் பேயா மாறுவாங்க என பேய் கூற, அதற்கு சிறுவன் ஒருவன் ’காந்தி, சுபாஷ், இன்னும் சில தலைவர்கள் தங்களுக்கான ஆசைகளை எதுவுமே நிறைவேறாம தான் இறந்து போனாங்க அவங்க எல்லோரும் பேயாக வரவில்லையே.. அவங்கள விட உனக்கு என்ன நிறைவேறாத ஆசை இருந்துட போகுது.’

என பல இடங்களில் வசனங்கள் கைகொடுத்திருக்கின்றன. நகைச்சுவையும் ரசிக்கும் படியாக இருக்கிறது. குழந்தைகள் அனைவரும் தங்களின் பங்களிப்பை மிகவும் பூர்த்தியாக செய்திருக்கிறார்கள்.

இந்த படத்திற்கு பிறகு குழந்தைகள் அபைவருக்கும் பேய் என்று சொன்னாலே சிரிப்பு கூட வரலாம். பேயையே கலாய்த்து தெறிக்க விடுகின்றனர் குழந்தைகள்.

ஷபீரின் பின்னனி இசை படத்திற்கு மேலும் பலம். காட்சியமைப்புகளில் ரவி கண்ணனின் கேமரா அழகு.

படத்தின் கடைசி 20 நிமிடங்கள் அப்லாஷ்… அதிலும் வெளிநாட்டு மந்திரவாதிக்கும் உள்நாட்டு மந்திரவாதிக்கும் நடக்கும் ஆட்டம்….

சங்குசக்கரம் – குழந்தைகளுக்கான கொண்டாட்டம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *