சரவணன் இருக்க பயமேன் – விமர்சனம்

’வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ என்ற காமெடி படத்திற்கு பிறகு இயக்குனர் எழில் இயக்கத்தில் உருவாகியுள்ளது ‘சரவணன் இருக்க பயமேன்’. உதயநிதி நாயகனாக நடிக்க ரெஜினா நாயகியாக நடிக்க, வழக்கம்போல் வரும் காமெடி பட்டாளங்களும் நடிக்க இப்படம் உருவாகி உள்ளது. எழிலின் வெற்றிப்பயணம் இந்த படத்திலும் தொடர்ந்ததா என்பதை காணலாம்.

படித்து விட்டு ஊரை சுற்றும் இளைஞனாக வருகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இவரது மாமனாக வரும் சூரி வட மாநில கட்சியின் தமிழக பொறுப்பாளராக முயற்சிக்க, அவரை தந்திரமாக துபாய்க்கு அனுப்பி வைத்து அந்த கட்சியின் தமிழக தலைவராகிறார் உதயநிதி.

சிறு வயதில் படிப்பிற்காக வெளியூர் சென்ற உதயநிதியின் மாமன் மகள் ரெஜினா சொந்த ஊருக்கு வருகிறார். சிறுவயதில் கீரியும் பாம்புமாக இருந்த உதயநிதியும் ரெஜினாவும், பருவத்தில் சந்தித்த போது உதயநிதி ரெஜினா மீது காதல் வயப்படுகிறார். ஆனால், ரெஜினாவோ அதே வீராப்புடன் தான் இருக்கிறார்.

அதே ஊர்காரர் மன்சூர் அலிகான் தனது மகன் சாம்ஸுக்கு ரெஜினாவை பெண் கேட்டு நிச்சயமும் பண்ணிவிடுகிறார்.. நிச்சயம் ஆனது தெரிந்ததும் உதயநிதி தவிக்கிறார்.
அப்போது உதயநிதி கல்லூரியில் படிக்கும் காலத்தில் விபத்தில் உயிரிழந்த சிருஷ்டியின் ஆவி அவருடைய காதலுக்கு உதவுகிறது.

இறுதியாக ரெஜினாவிற்கு உதயநிதி மீதான வெறுப்பு தீர்ந்ததா..?? இருவருக்கும் திருமணம் நடந்ததா..?? என்பதே படத்தின் மீதிக் கதை…

வழக்கம்போல் தான், கதைக்கான ஒரு முக்கியத்துவம் இல்லாமல் தொடர்ந்து காமெடிக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்துள்ளார் இயக்குனர்.

அனைத்து காட்சிகளில் உதயநிதி இருந்தாலும், மற்ற கதாபாத்திரத்தை மட்டுமே ரசிக்க முடிகிறது. சூரி, யோகி பாபு இருந்ததனாலோ என்னவோ உதயநிதி சிறிது ஸ்கோர் செய்துள்ளார்.

ரெஜினாவின் கவர்ச்சி சுண்டி இழுக்கிறது. ரெஜினாவின் குறும்புகளும் ரசிக்க வைத்துள்ளன. பேயாக வந்து காதலுக்கு உதவுவது என ஆங்காங்கே சின்ன புள்ள கலாட்டாவை தான் ஏற்றுக் கொள்ள முடியவில்லை..

சூரியின் காமெடி கலாட்டா ஒரு சில இடங்களில் மட்டுமே ரசிக்க வைக்கிறது. யோகி பாபு இல்லையென்றால் படத்தில் சொல்வதற்கு கூட ஒன்றும் இருந்திருக்காது போல.. ஆங்காங்கே வரும் அவருடை காமெடிகள் மட்டுமே திரையரங்கில் உட்கார வைக்கிறது.

ரோபோ சங்கர், ரவி மரியா, லிவிங்ஸ்டன், சாம்ஸ், மன்சூர் அலிகான், மனோபாலா, மதுமிதா என ஏகப்பட்ட நட்சத்திரப்பட்டாளம் இருந்தாலும் எல்லோருக்கும் சம வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

பஞ்சாயத்து சீன் ஏற்கனவே ரஜினி முருகன் படத்தில் வந்து விட்டதால் இதில் எடுபடாமல் போனது. கடைசி வரை ரெஜினாவின் காதல் இல்லாமலேயே படம் நகர்வதால் காதல் காட்சிகள் மனதில் ஒட்ட மறுக்கிறது..

இமானின் இசையில் ‘எம்புட்டு இருக்குது ஆச’ பாடல் கேட்க கேட்க சுகம். பின்னனி இசையும் பயணிக்கிறது.

சரவணன் இருக்க பயமேன் – லாஜிக் இல்லாமல் ஒருமுறை பார்த்து விட்டு வரலாம்.

Leave a Reply

Your email address will not be published.