சத்ரியன் – விமர்சனம்

வீர சிவாஜி படத்தின் சிறிது சறுக்கலுக்கு பிறகு நிச்சயம் தமிழ் சினிமாவில் நிலையான இடத்தை பிடிக்க ’சத்ரியன்’ படத்தை ஹிட் கொடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டுள்ளார் விக்ரம் பிரபு. சுந்தரபாண்டியன் படத்தை இயக்கிய எஸ் ஆர் பிரபாகரனுடன் கைகோர்த்து இப்படத்தை உருவாக்கியுள்ளார் விக்ரம் பிரபு. அனைவரும் எதிர்பார்த்த ஒரு வெற்றியை இப்படம் கொடுத்ததா இல்லையா என்று பார்த்து விடலாம்.

திருச்சியில் மிகப்பெரிய தாதாவாக உயர்ந்து நிற்பவர் சமுத்திரம். படத்தின் ஆரம்பத்திலேயே அவரை மற்றொரு ரவுடி அருள்தாஸ் & டீம் கொலை செய்து விட திருச்சியை தன்னுடைய கண்ட்ரோலில் கொண்டு வருகிறார் அருள்தாஸ்.

சமுத்திரத்தின் வலதுகையாக வருகிறார் விஜயமுருகன். விஜயமுருகனின் விசுவாசியாக வருகிறார் விக்ரம் பிரபு. சமுத்திரத்தின் மகளாக வரும் மஞ்சிமா மோகனுக்கு கல்லூரி செல்லும் போது பாதுகாப்பாக விக்ரம் பிரபுவும் உடன் செல்கிறார்.

எப்போதும் உடனே இருப்பதால் விக்ரம் பிரபு மீது காதல் வயப்படுகிறார் மஞ்சிமா மோகன். ஆரம்பத்தில் முரண்டு பிடிக்கும் விக்ரம் பிரபு பிறகு மஞ்சிமாவின் காதல் வலையில் சிக்குகிறார்.

இந்த காதலுக்கு விஜய முருகன் எதிர்ப்பு தெரிவிக்க அவரை எதிர்த்து நிற்கிறார் விக்ரம் பிரபு. இதனால் கோபம் கொண்ட விஜய முருகன் விக்ரம் பிரபுவை தீர்த்து கட்ட நினைக்கிறார்.

இது ஒருபுறம் இருக்க திருச்சியில் தன்னுடைய கொடி மட்டுமே பறக்க வேண்டும் என்பதற்காக வளர்ந்து வரும் ரெளடியான விக்ரம் பிரபுவை கொலை செய்ய அருள்தாஸும் நெருங்குகிறார். ஒரு கட்டத்தில் மஞ்சிமாவிற்காக திருந்தி வாழலாம் என நினைக்கிறார் விக்ரம் பிரபு.

திருந்தி வாழும் விக்ரம் பிரபுவிற்கு என்ன என்ன பிரச்சனைகள் வருகிறது, அதை அவர் எவ்வாறு எதிர்கொள்கிறார் என்பதே படத்தின் மீதிக் கதையாக கொடுத்திருக்கிறார் எஸ் ஆர் பிரபாகரன்.

ஒரு ரெளடியாக தன்னை நிறுத்திக் கொள்வதில் விக்ரம் பிரபு மிக பொருத்தமாகவே பொருந்திருக்கிறார். விறைப்பான ஒரு உடற்கட்டிலும், முறைப்பான ஒரு பார்வையிலும் நம்மை மிரட்டுகிறார் விக்ரம் பிரபு.

திருச்சியே தன்னை கண்டு மிரள்கிறது என கூறும் விக்ரம் பிரபு, மிரளும் அளவிற்கு எந்த ஒரு சம்பவத்தையும் செய்யாதது ஏன்..??

மஞ்சிமா மோகன் சுடிதாரில் அழகு தேவதையாக வலம் வருகிறார். அம்மாவிடம் தன்னுடைய காதலை வெளிப்படுத்தும் போது தைரியமான கோபத்தை காட்டுவதில் தனது நடிப்பை ஓங்கி வெளிப்படுத்துகிறார்.

இரண்டு காட்சிகளில் மட்டுமே வரும் யோகி பாபு கலகலப்பூட்டுகிறார். கூடுதல் காட்சியும் கொடுத்திருக்கலாமே இயக்குனர் அவர்களே….. கவி, ரியோ காட்சிகளை இன்னும் கொஞ்சம் யூஸ் பண்ணிருக்கலாமே.

காட்சிகள் அனைத்தும் இழுத்து கொண்டே செல்வது போர் அடிக்க வைக்கிறது. ஒரு கேங்க்ஸ்டர் படம் என்றால் விறுவிறுப்பு தான் ஹைலேட். இதில் அது ஒரு குறையாக இருந்தது.

படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகளுக்காக இயக்குனருக்கு பெரிய பாராட்டுகள் கொடுக்கலாம். படத்தின் மிகப்பெரிய பலமே சிவக்குமார் விஜயனின் ஒளிப்பதிவு மட்டுமே.

யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் எதுவும் மனதில் நிற்கவில்லை. பின்னனி இசையில் மட்டுமே மிரட்டியெடுத்திருக்கிறார்.

சத்ரியன் – ஒருமுறை சத்ரியனின் ஆட்டத்தை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published.