சவுகார்பேட்டை – விமர்சனம்

new-album-sowkarpettai-movie-1981
முதல் முறையாக பேய் கதையில் நடித்த ஸ்ரீகாந்திற்கு ஒரு வாழ்த்துக்கள். ஏப்ரல் மாதத்தில் படத்தில் பார்த்த ஐஸ்கிரீம் பாய் ஸ்ரீகாந்தா இது என கேட்கும் அளவிற்கு முகத்தை அகோரமாக வைத்து நடித்துள்ளார் ஸ்ரீகாந்த்.

ஸ்ரீகாந்த் மற்றும் ராய் லெட்சுமி இருவரும் சிறு வயதில் இருந்தே காதலிக்கிறார்கள். இருவருக்கும் திருமண ஏற்பாடுகள் நடைபெறுகிறது. இந்நிலையில் வில்லனாக வரும் சுமனிடம் வட்டிக்கு பணம் வாங்குகிறார் தலைவாசல் விஜய். அதற்காக அதிக வட்டிபோட்டு வீட்டை கொடுத்துவிடும்படி தலைவாசல் விஜய்யிடம் கேட்கிறார் சுமன். வீட்டை தர மறுக்கும் தலைவாசல் விஜய், அவரது மனைவியாக வரும் ரேகா, மகனாக வரும் ஸ்ரீகாந்த் மற்றும் மருமகளாக வரப்போகும் ராய் லெட்சுமி என ஒரு குடும்பத்தையே கொலை செய்து விடுகிறார் சுமன்.

ஸ்ரீகாந்த் மற்றும் ராய் லெட்சுமி இருவரும் ஆவியாக வந்து சுமன் மற்றும் அவரது மூன்று மகன்களை பழி வாங்க துடிக்கின்றனர். பழி வாங்கியும் விடுகின்றனர். இதற்கிடையில் ஸ்ரீகாந்தின் அண்ணனாக வரும் மற்றொரு ஸ்ரீகாந்த் சிறு வயதிலேயே ராய் லெட்சுமியின் மீது மோகம் கொள்கிறான். இதனால் அண்ணனாக வரும் ஸ்ரீகாந்தை வீட்டை விட்டு அடித்து விரட்டுகிறார் அவரது தந்தை தலைவாசல் விஜய்.

பின்னர் அவன் மிகப்பெரிய அகோரியாக (மந்திரவாதியாக) மாறுகிறான். ராய் லெட்சுமி பேயாக மாறினாலும் அவளை அடையாமல் விட மாட்டேன் என அவரை அடைய நினைக்கிறார். பேய்களுக்கும், அகோரிக்கும் நடக்கும் போராட்டம் தான் “சவுகார்பேட்டை”.

படத்தை இயக்கியிருக்கிறார் வி சி வடிவுடையான். அகோரியாக வரும் ஸ்ரீகாந்த் நடிப்பில் மிரட்டுகிறார். தனது குரலில் மிக அதிகமாகவே பயமுறுத்துகிறார். ராய் லெட்சுமியின் நடிப்பில் இது பெரிதாக பேசப்படும் ஒரு படமாக இருக்குமா??? என கேள்வி கேட்க தோன்றுகிறது. கவர்ச்சியை மட்டும் அள்ளி தெளித்திருக்கிறார் ராய் லெட்சுமி.

காமெடி என்கிற பெயரில் சரவணன், சிங்கமுத்து, பவர் ஸ்டார் சீனி வாசன் செய்யும் அலப்பறைகள் தலைவலி தான் வருகிறது. நல்ல ஒரு கதையை எடுத்த இயக்குனர் அதை சரியான திரைக்கதையாக கொடுப்பதில் தவறிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

பேய் வருவதற்கு முன்னரே கேமராவை அங்கேயும் இங்கேயும் அசைத்து அசைத்து எரிச்சலடைய வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சீனிவாச ரெட்டி. பாடல்களில் இசையை தவறவிட்டாலும், பின்னனி இசையில் கொஞ்சம் நிற்கிறார் இசையமைப்பாளர் ஜான் பீட்டர்.

பேய் சம்மந்தமான கதையினை கையில் எடுக்கும் போது சற்று அதிகமான கவனத்தை கையில் எடுக்க வேண்டாமா இயக்குனரே… நல்ல ஒரு முன்னனி நாயகர்களை கையில் எடுத்தும் அவர்களை சரியாக உபயோகப்படுத்தவில்லை என்று தான் கூற வேண்டும்.

திரைக்கதையினை எடுக்கும் விதத்தில் மட்டும் கொஞ்சம் இல்லை நிறையவே கவனம் செலுத்தியிருந்தால் சவுகார்பேட்டை பேய் மிரட்டல் மிரட்டியிருக்கும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *