துப்பறிவாளன் – விமர்சனம்

நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை நிரப்ப வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ளது இந்த ‘துப்பறிவாளன்’. இப்படத்தில் வினய், பிரசன்னா, பாக்கியராஜ், ஆண்ட்ரியா, அனு இமானுவேல், சிம்ரன், என ஒரு நடிகர்கள் பட்டாளமே நடித்துள்ளனர்.

எந்த ஒரு காரியத்தையும் தன்னுடைய அறிவால், திறமையால் துப்பறிந்து விடும் திறமை படைத்தவர் துப்பறிவாளனாக வரும் விஷால்.. இவரது நண்பனாக வருகிறார் பிரசன்னா. விஷால் தன்னுடைய திறமைக்கு ஏற்ற எந்த ஒரு வழக்கும் நம்மிடையே வரவில்லையே என புலம்பிக் கொண்டிருந்த சமயத்தில் சிறுவன் ஒருவன் தன்னுடைய நாய்க்குட்டியை யாரோ துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாகவும், அவனை கண்டுபிடித்து தருமாறும் விஷாலிடம் கூறுகிறான்.

அந்த சிறுவனுக்காக வழக்கை கையில் எடுக்கிறார் விஷால். வழக்கை விசாரிக்கும் போது பல திடுக்கிடும் சம்பவங்கள் அரங்கேறுகிறது. கடத்தல் மற்றும் கொலை சம்பவங்களை தொடர்ச்சியாக செய்து வரும் மிகப்பெரிய கும்பலை கண்டறிகிறார் விஷால். யார் அவர்கள்..?? எதற்காக இந்த செயலை செய்கிறார்கள் என்பது தான் இந்த துப்பறிவாளனின் மீதிக் கதை.

இதுவரை யாரும் பாத்திராத வித்தியாசமான ஒரு கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்துள்ளார் விஷால். துப்பறிவாளனுக்கே உரித்தான ஒரு உடல்வாகு (பாடிலாங்குவேஜ்) அலட்டிக்கொள்ளாத நிதானமான ஒரு நடிப்பால் அனைவரையும் கவனிக்க வைக்கிறார்.

முதல் முறையாக வில்லன் அவதாரம் எடுத்திருக்கிறார் வினய். வினய்க்கு இப்படம் நிச்சயம் ஒரு மைல்கல் தான். ஸ்டைலிஷ் வில்லனாக கலக்கியிருக்கிறார். பிரசன்னா, ஆண்ட்ரியா, சிம்ரன் , அனு இமானுவேல் என அனைவரும் கதாபாத்திரத்தை கச்சிதமாக எடுத்திருக்கிறார்கள்.

சின்ன கதாபாத்திரம் என்றாலும் அனைவரின் மனதையும் கலங்கடித்து விடுகிறார் பாக்கியராஜ். தனது நடிப்பில் அனுபவத்தை ஒரு காட்சியில் காட்டி சென்று விடுகிறார்.

தனக்கே உரித்தான பாணியில் அழகாக எடுத்து கதையை நகர்த்தி செல்கிறார் மிஷ்கின். குறிப்பாக கடைசி 20 நிமிடங்களில் நகரும் கதை அனைவரையும் சீட்டின் நுனியில் அமர வைக்கிறது.

அரோல் கரோலியின் பின்னனி இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. கார்த்திக் வெங்கட்ராமின் ஒளிப்பதிவும் கதையின் ஓட்டத்திற்கு கை கொடுத்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *