விக்ரம் வேதா – விமர்சனம்

 
இறுதிசுற்று படத்திற்கு பிறகு மாதவனும் றெக்க படத்திற்கு பிறகு விஜய் சேதுபதியும் இணைந்து நடித்திருக்கும் படம் தான் ‘விக்ரம் வேதா’. இரு வெற்றி நாயகர்களும் இணைந்து நடித்துள்ளதால் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. இந்த எதிர்பார்ப்பை ‘விக்ரம் வேதா’ பூர்த்தி செய்ததா என்பதை பார்க்கலாம்.
 
விக்ரமாக வரும் மாதவனுக்கும் வேதாவாக வரும் விஜய் சேதுபதிக்கும் நடக்கும் போராட்டமே இந்த ‘விக்ரம் வேதா’. கதைப்படி மாதவன் போலீஸ் எண்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட். வட சென்னையை கலக்கி வரும் விஜய் சேதுபதியை எண்கவுண்டரில் சுட்டுத் தள்ள காத்திருக்கிறார் மாதவன்.
 
விஜய் சேதுபதியின் கூட்டாளி ஒருவனை மாதவன் சுட்டுக் கொன்றதும் தானாக வந்து போலீசில் சரண் அடைகிறார். அப்போது மாதவனிடம் ஒரு கதையை கூறுகிறார் விஜய் சேதுபதி. பெயிலில் வெளிவந்த விஜய் சேதுபதி,  மீண்டும் சிக்கும் போது அப்போதும் மாதவனிடம் ஒரு கதையை கூறுகிறார்.
 
ஒவ்வொரு கதை கூறும் போதும் ஒரு சில முடிச்சுகள் அவிழ்க்கப்படுகிறது. விக்ரம் வேதாவை தேடி போகிறாரா..?? இல்லை வேதா விக்ரமை தேடி வருகிறாரா..?? என்பதே படத்தின் மீதிக் கதை.
 
மாதவன் தான் ஒரு சிறந்த நடிகராக பல படங்களில் வெளிப்படுத்தியுள்ளார். மிகச்சிறந்த நடிகராக இறுதிசுற்று மூலம் நிரூபித்தார். எண்கவுண்டர் போலீசாக மிரட்டியிருக்கிறார். போலீஸ் எண்கவுண்டர் இப்படி தான் இருக்கும் என்பதை மாதவனிடம் இருந்து தெரிந்து கொள்ளலாம் போல… அப்படி ஒரு நேர்த்தியான ஒரு தோற்றம் மாதவனிடம்.
 
விஜய் சேதுபதி வழக்கம் போல தனது நடிப்பில் வேறு விதத்தை காட்டியுள்ளார். ’வாய்ப்புகள் நம்மள தேடி வந்து உட்காராது.. நாம தான் தேடி போகனும் இல்ல உருவாக்கிகணும்’ என பஞ்ச் டயலாக்கை பல இடங்களில் அடிக்கவும் தவறவில்லை விஜய் சேதுபதி. ஒரு தாதாவுக்கான கதாபாத்திரத்தை நேர்த்தியாக செதுக்கியிருக்கிறார். 
 
விஜய் சேதுபதியும் மாதவனும் சந்திக்கும் போதெல்லாம் ஒரு ட்விஸ்ட் நடப்பது கதையின் வேகத்தை சூடேற்றுகிறது. படத்தின் சுவாரஸ்யம் போய் விடும் என்பதால் சில கதாபாத்திரங்களை பற்றி இந்த விமர்சனத்தில் பேசவில்லை.
 
பின்னனி இசையும் ஒளிப்பதிவும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. புஷ்கர் – காயத்ரி இருவரின் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் டெக்னிக்கல் விஷயங்களும் குறைவில்லாமல் நடந்திருக்கிறது. 
 
வினோத்தின் ஒளிப்பதிவும் சாம் இசையின் பின்னனியும் மிரட்டல்…. அனைத்து கதாபாத்திரத்திலும் ஒரு யதார்த்தமான நடிப்பை கொடுத்ததற்காகவே இயக்குனர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்ளலாம். முதல் பாதியில் கதை சற்று மெதுவாக நகர்வது கொஞ்சம் அலுப்பை தட்டுகிறது.
 
விக்ரம் வேதா – மிரட்டலில் குறைவில்லை

Leave a Reply

Your email address will not be published.